search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் 5-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் 168 பேர் கோடீசுவர வேட்பாளர்கள்
    X

    உ.பி.யில் 5-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் 168 பேர் கோடீசுவர வேட்பாளர்கள்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 168 பேர் கோடீசுவரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
    லக்னோ:

    5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இங்கு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. நாளை 5-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    இதில், 52 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. அதில் ஒரு தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் 51 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

    நாளைய தேர்தலில் தற்போதைய மந்திரிகள் அவதேஷ் பிரசாத், வினோத்சிங் பண்டிட், ராம்கரண் ஆரியா, யா‌ஷர் ஷா, தேஜ் நாராயண் பாண்டே, எஸ்.பி. யாதவ், சங்கலால் மாஞ்சி, காயத்ரி பிரஜாபதி ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    ராகுல்காந்தியின் எம்.பி. தொகுதிக்குட்பட்ட அமேதி சட்டமன்ற தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.



    51 தொகுதிகளில் மொத்தம் 617 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 43 பேர் பெண்கள். இதில் 612 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கமும், உத்தரபிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்தது.

    இதில் 168 பேர் (27 சதவீதம்) கோடீசுவரர்கள் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து இருக்கிறது. இதில் 43 பேர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் ஆவார்கள்.

    பா.ஜனதா 38, சமாஜ்வாடி 32, காங்கிரஸ் 7, ஆர்.எல்.டி. 9 மற்றும் 14 பேர் சுயேட்சை ஆவார்கள்.

    மேலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்களில் 117 பேர் குற்றவாளிகள். அவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. 96 பேர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    வேட்பாளர்களில் 156 பேர் பான்எண் விவரங்களை கொடுக்கவில்லை. 365 பேர் வருமானவரி விவரங்களை தெரிவிக்கவில்லை. 266 பேர் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 285 பேர் பட்டதாரிகள். 9 பேருக்கு எழுத, படிக்க தெரியாது.

    மேற்கண்ட தகவல் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×