search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு: 52 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்ந்தது
    X

    உத்தரபிரதேசத்தில் 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு: 52 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்ந்தது

    உத்தரபிரதேசத்தில் 5-ம் கட்டமாக 52 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் அங்கு முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது.

    மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் இதுவரை 4 கட்டமாக 262 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. இன்னும் 141 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    5-வது கட்டமாக 52 தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை (27-ந்தேதி) தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 52 தொகுதிகளும் அம்பேத்கர் நகர், அமேதி, பக்ரச், பல்ராம்பூர், பஸ்தி, பைசாபாத், கோண்டா, சந்த்சுபீர் நகர், சரஸ்வதி, சித்தார்த் நகர், சுல்தான்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் அமைந்துள்ளன.

    இந்த 52 தொகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 52 தொகுதிகளில் 40 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    கட்சி வேட்பாளர்களில் 168 பேர் கோடீசுவரர்கள் என்றும், 141 பேர் கிரிமினல்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மற்ற கட்ட பிரசாரங்களை விட 5-ம்கட்ட தேர்தல் பிரசாரம் மிக விறுவிறுப்பாக நடந்தது.

    இறுதி நாளான இன்று (சனிக்கிழமை) அந்த 52 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் அங்கு முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடியும் இன்று உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மாலை 5 மணியுடன் 52 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

    நாளை ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு திங்கட்கிழமை 52 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். இதையொட்டி அந்த 52 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    5-ம் கட்ட தேர்தல் நடக்கும் 11 மாவட்டங்களும் நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ளது. எனவே மாவோயிஸ்டுகள் ஊடுருவலை கருத்தில் கொண்டு இந்த 11 மாவட்டங்களும் நாளை முதல் சீல் வைக்கப்பட உள்ளது.

    கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது இந்த 52 தொகுதிகளில் 37 தொகுதிகளை சமாஜ்வாடி கைப்பற்றி இருந்தது. பா.ஜ.க., காங்கிரசுக்கு தலா 5 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 இடமும் கிடைத்திருந்தது.

    ஆனால் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இந்த 52 தொகுதிகளில் 44 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தது. பா.ஜ.க.வுக்கு தற்போதும் அதே அளவுக்கு வாக்குகள் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணிக்கு இந்த 11 மாவட்டங்களிலும் அதிக செல்வாக்கு இருக்கிறது. எனவே 5-ம் கட்ட தேர்தல் அந்த கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி 6-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மகராஜ்கஞ்ச், கோரக்பூர், தியோரியா, அசம்கர், மா, பலியா ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 49 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தல் நடைபெறும்.

    மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு 7-ம் கட்ட இறுதி தேர்தல் மார்ச் 8-ந்தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்ட வாரணாசி தொகுதியில் 7-ம் கட்ட தேர்தலின்போது ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    வாரணாசி தொகுதியில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளன.
    Next Story
    ×