search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை மாநகராட்சியில் இழுபறி: சிவசேனா-84, பா.ஜ.க. 81 வார்டுகளில் வெற்றி
    X

    மும்பை மாநகராட்சியில் இழுபறி: சிவசேனா-84, பா.ஜ.க. 81 வார்டுகளில் வெற்றி

    மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவ சேனா 84 வார்டுகளிலும், பா.ஜ.க. 81 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருப்பதால்,மாநகராட்சியை நிர்வகிப்பது யார்? என்பதில் இழுபறி நிலவுகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி வைத்திருந்தபோதும், மத்திய பா.ஜ.க. அரசை அவ்வப்போது விமர்சனம் செய்து வந்தது.

    இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி பிரிந்து தனித்தனியாக போட்டியிட்டன. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், மும்பை மாநகராட்சியைப் பொருத்தவரையில், மாநகராட்சியை கைப்பற்றுவதில் சிவ சேனாவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.

    மும்பை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கு 114 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். காலை 10 மணி நிலவரப்படி சிவசேனா 10 வார்டுகளிலும், பா.ஜ.க. 9 வார்டுகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் மூன்று வார்டுகளை வெற்றியை நோக்கி முன்னேறியது. நேரம் செல்லச்செல்ல சிவசேனா வேட்பாளர்கள் பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை பெறத் தொடங்கினர்.

    மதிய நிலவரப்படி மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா 85 வார்டுகளிலும், பா.ஜ.க. 52 வார்டுகளிலும் முன்னிலை பெற்றனர். காங்கிரஸ்-16, நவநிர்மாண் சேனா-9, தேசியவாத காங்கிரஸ்-6, பிற வேட்பாளர்கள் 5 என முன்னிலை நிலவரம் இருந்தது.

    பிற்பகல் 3 மணி நிலவரப்படி 199 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சிவ சேனா 77 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.க. 69 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 27 வார்டுகளையும், தேசியவாத காங்கிரஸ் 8 வார்டுகளையும், நவநிர்மாண் சேனா 4 வார்டுகளையும், சமாஜ்வாடி கட்சி 6 வார்டுகளையும், ஓவைசி கட்சி 3 வார்டுகளையும், ஏபிஎஸ் ஒரு வார்டிலும், சுயேட்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர்.

    இறுதி நிலவரப்படி சிவ சேனா 84 வார்டுகளையும், பா.ஜ.க. 81 வார்டுகளையும் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் 31 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் 9 வார்டுகளிலும், நவநிர்மாண் சேனா 7 வார்டுகளிலும், சுயேட்சைகள் 14 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதன்மூலம் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே, எந்த கட்சி மாநகராட்சியை நிர்வகிக்கும்? என்பது இன்னும் முடிவாகவில்லை.
    Next Story
    ×