search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாரத்துக்கு செல்ல முடியாததால் கடிதம் மூலம் ஓட்டு கேட்ட சோனியா
    X

    பிரசாரத்துக்கு செல்ல முடியாததால் கடிதம் மூலம் ஓட்டு கேட்ட சோனியா

    உத்தர பிரதேசத்தில் தற்போது நடந்துவரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரத்துக்கு செல்ல முடியாததால் வாக்காளர்களுக்கு கடிதம் மூலம் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் சட்டசபை தேர்தலில் அகிலேசின் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்காக அகிலேஷ் - ராகுல் இருவரும் நடத்தி வரும் தேர்தல் பிரசாரம், மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் உடல் நலக்கோளாறு காரணமாக அவர் ரேபரேலி தொகுதியில் மட்டும் ஒரே ஒரு பொதுக்கூட்டத்துக்கு பேச முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் ரேபரேலியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்துக்கும் சோனியாவால் செல்ல இயலவில்லை. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்தனர். இதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் சோனியா கூறி இருப்பதாவது:-



    வாக்காள பெருமக்களே.... உங்களையெல்லாம் நேரில் சந்தித்துப் பேசி ஆதரவு கேட்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் என்னால் நேரில் வர இயலவில்லை.

    எங்களுடைய வாழ்க்கையில் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளும் எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் பெருமை தரும் அம்சமாக உள்ளன. எனது வாழ்வில் இத்தொகுதிகளுடன் கொண்டுள்ள அன்பும், இத்தொகுதிகளின் மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பும் நான் சம்பாதித்தவைகளில் மிக பெரியதாக கருதுகிறேன்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நீங்கள் மோடியை நம்பி அவருக்கு நிறைய இடம் கொடுத்து விட்டீர்கள். ஆனால் மோடி தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறித்து வருகிறார். உங்களது நிலத்தை மோடி பறித்து கொண்டார். உங்கள் வேலையையும் பறித்து விட்டார். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் அவர் பறித்துக் கொண்டுள்ளார்.

    நாங்கள் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் முடக்கி விட்டார். மத்திய அரசின் இந்த போக்கு எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.

    உலகில் எந்த நாடாவது தன் சொந்த மக்களுக்கு எதிராக செயல்படுமா? மோடி அரசு செயல்படுகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மோடி உங்களை பாழ்படுத்திவிட்டார்.

    இந்த நிலையில் தற்போது நடக்கும் தேர்தல் மிக முக்கியமானது. எனவே சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சோனியா கூறி உள்ளார். இந்த கடிதம் நேற்று அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டது.



    இதற்கிடையே சோனியாவின் மகள் பிரியங்கா அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பல ஊர்களில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பிரியங்கா பல பொதுக்கூட்டங்களில் பேச மறுத்துவிட்டார். அந்த பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார்.

    இது காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல பா.ஜ.க.வில் அத்வானி, வருண் இருவரும் பிரசாரம் செய்யாதது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×