search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்தி, தியானம், டி.வி. பார்ப்பது சசிகலாவின் ஜெயில் வாழ்க்கை
    X

    பக்தி, தியானம், டி.வி. பார்ப்பது சசிகலாவின் ஜெயில் வாழ்க்கை

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா தியானம், பக்தி, டி.வி. பார்ப்பது என ஜெயிலில் பொழுதை கழிக்கிறார்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற கைதிகளை விட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் தங்கி இருக்கும் அறைகள் கொஞ்சம் விசாலமானது. அதில் படுத்துக்கொள்ள இரும்பு கட்டில்கள், 2 போர்வைகள், டி.வி. வசதி உள்ளது.

    முதலில் சிறைக்குள் வந்ததும் சசிகலா மிகவும் சோர்வடைந்தார். தூக்கம் வராமல் தவித்தார். யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். தற்போது சிறை வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு விட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் சசிகலா 1 மணி நேரம் அறையிலேயே அமர்ந்து தியானம் செய்கிறார். 6.30 மணிக்கு வெந்நீரில் குளித்து சிறைக்குள் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அவருடன் இளவரசியும் சென்று சாமி கும்பிடுகிறார்.



    அந்த அம்மன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது துளசி மாடம் வைத்து வழிபட்டு வந்தார். தற்போது சசிகலா அந்த துளசி மாடத்தைச் சுற்றி வந்து வழிபடுகிறார். பிறகு தமிழ், ஆங்கில செய்திப் பத்திரிகைகள் படிக்கிறார்.

    காலை 8.30 மணிக்கு காலை உணவு சாப்பிட்டு முடித்து விட்டு டி.வி. பார்க்கிறார். பகல் 2 மணிக்கு மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பிறகு இருவரும் குட்டி தூக்கம் போடுகிறார்கள். அதன் பிறகு மீண்டும் டி.வி. பார்த்து நேரத்தை செலவிடுகிறார்கள்.

    மாலையில் பார்வையாளர்களை சந்தித்து பேசுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் அங்கு உலாவுகிறார்கள். அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள்.



    ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் சிறை விதிகளின்படி என்ன உணவு தருகிறார்களோ, அதையே சாப்பிடுகிறார். களி, சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகிறார். சிறைக்கு சென்றதும் முதலில் திருநீறு வேண்டும் என்று கேட்டு ஒரு பாக்கெட் திருநீறு வாங்கிக் கொண்டார்.

    நெற்றி முழுவதும் திருநீறு பூசிக்கொள்கிறார். சட்டை பையில் காளி படத்தை எந்நேரமும் வைத்துக் கொள்கிறார். பின்னர் காளி படத்தை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஓதி வழிபடுகிறார். அவருடன் தங்கி இருக்கும் மற்ற கைதிகள் ‘‘சுதாகரன் மந்திரவாதி போல் நடந்து கொள்கிறார், அவரது வழிபாடு எங்களை மிரட்டுவது போல் உள்ளது, அவரை வேறு அறைக்கு மாற்றுங்கள் என்று ஜெயில் காவலர்களிடம் பயத்துடன் கூறினார்கள். தினமும் பல மணி நேரம் காளி வழிபாட்டில் ஈடுபடுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு மேல் தான் தூங்குகிறார்.
    Next Story
    ×