search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்: மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றுமா?
    X

    மராட்டியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்: மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றுமா?

    மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிடும் சிவசேனா மும்பை மாநகராட்சியை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    மராட்டியத்தில் மும்பை, தானே, நாக்பூர், புனே, நாசிக் உள்பட 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 118 பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று நடந்தது.

    மொத்தம் உள்ள 5,512 பதவிகளுக்கு 17,331 பேர் போட்டியிடுகிறார்கள். 3.77 கோடி வாக்காளர்கள் ஓட்டுப் போடுகிறார்கள். மொத்தம் 40,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 2.76 லட்சம் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதற்கு 2,275 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவுக்காக 7,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இன்று இங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போடுகிறார்கள்.

    மும்பையில் கடந்த தேர்தலில் சிவசேனாவும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 227 இடங்களில் சிவசேனா 75 இடங்களிலும், பா.ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 52 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 13 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த தேர்தலில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. தேர்தல் பிரசாரத்தில் இரு அணியினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தனர்.



    பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களை குறை கூறியும், செல்லாத நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி சிவசேனா கடுமையாக பிரசாரம் செய்து வந்தது. இரு கூட்டணி கட்சிகளும் மோதிக் கொண்டதை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

    மராட்டியத்தைப் பொறுத்தவரை இதுவரை பா.ஜனதாவை விட சிவசேனா தான் அதிக இடங்களை கைப்பற்றி முன்னணியில் இருந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் சிவசேனாவை பின்னுக்கு தள்ளி விட்டு பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியது. என்றாலும் மாநிலத்தில் கூட்டணி மந்திரி சபை நீடிக்கிறது.

    இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உடைந்து, இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகிறது. எனவே இந்த தேர்தல் எந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமையும் என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×