search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
    X
    எடியூரப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் 24 மணி நேரத்தில் சித்தராமையா சிறைக்கு செல்வார்: எடியூரப்பா

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் 24 மணி நேரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா சிறைக்கு செல்வார் என மாநில தலைவர் எடியூரப்பா பேசியுள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் தோல்வி மற்றும் ஊழல் முறைகேடுகளை கண்டித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பா.ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று, அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார். அதன்படி, பெங்களூரு டவுன்ஹால் முன்பு நேற்று எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது எடியூரப்பா பேசியதாவது:-

    விவசாயிகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். கால்நடைகள் செத்து மடிகின்றன. அதுபற்றி எல்லாம் முதல்-மந்திரி சித்தராமையா கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய சித்தராமையா யோசிக்கிறார். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் எண்ணம் சித்தராமையாவுக்கு இல்லை.

    மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதுவே முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முழுமையாக தோல்வி அடைந்திருப்பதை உணர்த்துகிறது.

    காங்கிரஸ் மேலிடத்திற்கு ரூ.1,000 கோடி கொடுத்து விட்டு முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா இருந்து வருகிறார். பெங்களூருவில் இரும்பு மேம்பாலம் அமைக்க ரூ.65 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. அதனால் தான் மக்களின் எதிர்ப்பையும் மீறி இரும்பு மேம்பாலம் அமைக்க காங்கிரஸ் அரசு துடிக்கிறது. இதுபற்றி நான் கூறியதால், என் மீது வழக்குகள் இருப்பதாக சித்தராமையா சொல்கிறார். என் மீதான அனைத்து வழக்கையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அப்படி இருந்தும் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் என் மீது குற்றச்சாட்டு கூறுகிறார். இது கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    பெங்களூருவில் வசிக்கும் மக்கள் வரியாக செலுத்திய ரூ.3,500 கோடி மாநகராட்சிக்கு செல்லவில்லை. மக்கள் வரிப்பணம் ரூ.3,500 கோடியை ஊழல் செய்து விட்டார்கள். இந்த ஊழல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பா.ஜனதா கட்சியின் மாநகராட்சி கவுன்சிலரிடம் கொடுப்பேன். அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் அந்த ஆவணங்களை தாக்கல் செய்வார்கள்.

    மாநிலத்தில் தற்போது ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. கிராம வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் நடந்திருக்கிறது. அதுபற்றி எந்த விசாரணைக்கும் சித்தராமையா உத்தரவிடவில்லை.

    கர்நாடகத்தில் 2018-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. அவ்வாறு பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். 24 மணிநேரத்தில் சித்தராமையா சிறைக்கு செல்வார்.

    அவருடன் ஊழலில் ஈடுபட்ட மந்திரிகளும் சிறைக்கு செல்வார்கள். இன்னும் ஒரு ஆண்டு காத்திருங்கள். அப்போது யார்? யார்? எந்த சிறைக்கு செல்வார்கள் என்பது தெரியவரும். சித்தராமையாவும் சிறைக்கு செல்வது உறுதி.

    நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கோர்ட்டு கூறியுள்ளது. அதுபோல சித்தராமையா நிரூபிக்க தயாரா? அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார். காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், முறைகேடுகளை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    முன்னாள் துணை முதல் மந்திரியும், எம்.எல்.ஏவுமான அசோக் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கர்நாடகத்தில், காங்கிரஸ் அரசின் போக்கினையும், ஆட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

    உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூட இன்னும் 2 மாதத்திற்குள் காங்கிரசை விட்டு விலகக்கூடும்’’.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், உடுப்பி- சிக்மகளூர் எம்.பி. ஷோபா கரந்த்லஜே, எம்.எல்.ஏ.க்கள் லிம்பாவளி, முனிராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. கட்டா சுப்பிரமணிய நாயுடு உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.

    இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, சித்தராமையா அரசுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இந்தநிலையில், பா.ஜ.க. வினரின் ஆர்ப்பாட்டம் குறித்து சித்தராமையா கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியினர், தேர்தலை மனதில் வைத்து அரசியல் செய்கின்றனர். மேலும் எடியூரப்பா மீது 20 வழக்குகள் உள்ளன. ஆனால் என் மீது ஒரு கறுப்பு புள்ளி கூட கிடையாது. எங்கள் கட்சி மேலிடத்திற்கு பெருந்தொகையை கப்பமாக கட்டினேன் என்பதில் சிறிதும் உண்மையில்லை.

    நாங்களும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×