search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பணம் விவகாரம்: வருமான வரித்துறையின் 2-வது வேட்டை அடுத்த மாதம் தொடங்குகிறது
    X

    கருப்பு பணம் விவகாரம்: வருமான வரித்துறையின் 2-வது வேட்டை அடுத்த மாதம் தொடங்குகிறது

    கணக்கில் காட்டாத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு எதிரான வருமான வரித்துறையின் 2-வது கட்ட வேட்டை, அடுத்த மாதம் தொடங்குகிறது.
    புதுடெல்லி:

    கணக்கில் காட்டாத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு எதிரான வருமான வரித்துறையின் 2-வது கட்ட வேட்டை, அடுத்த மாதம் தொடங்குகிறது.

    பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தினர்.

    இதில், ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கள் கணக்கில் செலுத்தியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. இப்படி செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.10 லட்சம் கோடி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. மீதி தொகை, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மற்றும் அவை சம்பந்தப்பட்ட நபர்கள் தாக்கல் செய்தவை ஆகும். அப்பணம், அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் ஒத்துப்போகின்றன. எனவே, அவை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

    கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி டெபாசிட் செய்தவர்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் கிளன் மணி’ என்ற பெயரிலான வேட்டையை வருமான வரித்துறை தொடங்கியது. இதன் முதல்கட்ட வேட்டையில், ரூ.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்த 18 லட்சம் பேரிடம் விளக்கம் கேட்டு இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டன.

    அதற்கு 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் மட்டும், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் பதில் அளித்தனர். தாங்கள் டெபாசிட் செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு எதிரான விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், ‘ஆபரேஷன் கிளன் மணி’ திட்டத்தின் 2-வது கட்ட வேட்டையை வருமான வரித்துறை அடுத்த மாதம் தொடங்குகிறது.

    இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த திட்டத்தின்படி, வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தவர்கள் குறித்த பட்டியலை இன்னும் 10 நாட்களில் வருமான வரித்துறைக்கு வங்கிகள் அனுப்பி வைக்கும்.

    அதன்பிறகு, அதை ஆய்வு செய்வதற்காக, 2 புள்ளிவிவர ஆய்வு நிறுவனங்களை வருமான வரித்துறை நியமிக்கும். அதிக பணம் டெபாசிட் செய்தவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்களை அந்த நிறுவனங்களிடம் வருமான வரித்துறை அளிக்கும்.

    வருமான வரி கணக்கு விவரங்களுடன் அந்த டெபாசிட் தொகை ஒத்துப்போகிறதா என்று அந்த நிறுவனங்கள் ஆய்வு செய்யும். அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக கருதி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒரே நபர், வெவ்வேறு கணக்குகளில் பணம் போட்டு இருந்தாலும் கண்டறியப்படும். ரூ.5 லட்சத்துக்கு குறைவாக டெபாசிட் செய்தவர்களுக்கு எதிராக இப்போதைக்கு எந்த விசாரணையும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×