search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
    X

    உத்தரபிரதேசத்தில் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

    உத்தரபிரதேசத்தில் 53 தொகுதிகளுக்கு நடைபெறும் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் 53 தொகுதிகளுக்கு நடைபெறும் 4-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்கள் நடக்கிறது. இதில் 3 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் 4-வது கட்ட தேர்தல் 23-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. பந்தல்காண்ட் பிராந்தியத்தை உள்ளடக்கிய 12 மாவட்டங்களை சேர்ந்த 53 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.

    இதில் சோனியாகாந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி மற்றும் அலகாபாத், பிரதாப்கர், பதேப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் முக்கியமானவை ஆகும். பா.ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியின் பலத்தை சோதிக்கும் முக்கியமான களமாகவும் இந்த 4-ம் கட்ட தேர்தல் விளங்குகிறது.

    இந்த தேர்தலுக்காக உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் பதேப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றினார். மேலும் அலகாபாத்திலும் நேற்று 2 கூட்டங்களில் கலந்து கொண்டார்.

    சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்றுமுன்தினம் ஜான்சியில் பிரசாரம் செய்தனர். இதைப்போல அலகாபாத்தில் இன்று அவர்கள் பிரசாரம் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. முன்னதாக ரேபரேலியில் நடந்த 2 பிரசார கூட்டங்களில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியுடன், பிரியங்காவும் பிரசாரம் செய்தார்.

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி 6 கூட்டங்களில் உரையாற்றினார். கடந்த சில நாட்களாக அனல் பறந்து வரும் இந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

    இந்த தேர்தலில் 1.84 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக 19,487 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநில மந்திரி மனோஜ்பாண்டே (உச்சாகர் தொகுதி), பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் சித்தார்த்நாத் சிங் (அலகாபாத் மேற்கு), பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டசபைக்குழு தலைவர் கயாசரன் திங்கர் (நரைனி), சுயேச்சை வேட்பாளர் ராஜா பையா (குண்டா), காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரியின் மகளான ஆராதனா மிஸ்ரா (ராம்பூர் காஸ்) ஆகியோர் 4-வது கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர். 
    Next Story
    ×