search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகாலாந்து மாநிலத்தின் புதிய மந்திரிசபை 22-ம் தேதி பதவியேற்பு
    X

    நாகாலாந்து மாநிலத்தின் புதிய மந்திரிசபை 22-ம் தேதி பதவியேற்பு

    நாகாலாந்து மாநில புதிய முதல் மந்திரி ஷுரோஜெலி லெய்சீட்சு தலைமையிலான மந்திரிசபை வரும் 22-ம் தேதி பதவியேற்கிறது.
    கோகிமா:

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணிக்கு பா.ஜனதாவின் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. முதலமைச்சராக டி.ஆர்.ஜெலியாங் பதவி வகித்து வந்தார்.

    60 உறுப்பினர்களை கொண்ட நாகாலாந்து சட்டசபையில் நாகா மக்கள் முன்னணிக்கு 46 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 4 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு உறுப்பினரும், சுயேச்சைகள் 8 பேரும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்து கடந்த மாத தொடக்கத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வர் ஜெலியாங் பதவி விலக கோரியும், நாகாலாந்து பழங்குடியினர் நடவடிக்கை குழு கடந்த 30–ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளது.

    இந்த நிலையில் ஆளும் ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 49 பேர் முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் அனைவரும், தற்போது பக்கத்து மாநிலமான அசாம் மாநிலத்தின் காசிரங்கா பூங்கா பகுதிக்கு சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கி இருக்கின்றனர்.

    மாநில மக்களின் விருப்பத்தின்படி நாகாலாந்து எம்.பி.யும், முன்னாள் முதல்–மந்திரியுமான நெய்பியூ ரியோவை உடனடியாக முதலமைச்சராக நியமிக்கவேண்டும் என்று கூட்டணியின் தலைமையிடம் எழுத்துப்பூர்வமாக இவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். ரியோ எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாகா மக்கள் முன்னணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

    இந்த நெருக்கடியான சூழ்நிலையில் முதல்வர் ஜெலியாங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாகா மக்கள் முன்னணியின் புதிய சட்டசபை தலைவரை தேர்வு செய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

    இதில், ஷுரோஜெலி லெய்சீட்சு சட்டமன்ற கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கவர்னர் பி.பி. ஆச்சார்யாவை சந்தித்து ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்தார். இதையேற்ற கவர்னர், வரும் 22-ம் தேதி புதிய மந்திரிசபை பதவியேற்று கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
    Next Story
    ×