search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தேர்தல்: காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணி மோடியின் சிரிப்பை பறித்து விட்டது
    X

    உ.பி. தேர்தல்: காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணி மோடியின் சிரிப்பை பறித்து விட்டது

    உ.பி. சட்டசபை தேர்தலை சந்திக்க மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் அமைத்துள்ள தேர்தல் கூட்டணி மோடியின் சிரிப்பை பறித்து விட்டது என ராகுல் காந்தி இன்று குறிப்பிட்டுள்ளார்.
    லக்னோ:

    403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்றுகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4-வது கட்ட வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

    மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க., முன்னாள் ஆளும்கட்சியான பகுஜன் சமாஜ் ஆகியவை தனித்தனியாக மோதுகின்றன.

    இந்நிலையில், வரும் வியாழக்கிழமை வாக்குப்பதிவை சந்திக்கவுள்ள பாண்டா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னர், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரதமர் மோடிக்கும் இதே குறிக்கோள் இருந்திருந்தால் மந்திரிசபை கூட்டத்தை கூட்டி ஐந்தே நிமிடத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்க முடியும். ஆனால், இதுதொடர்பான அவரது நோக்கங்கள் மிகவும் உயர்வானது என்பதால் அத்தகைய நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை.

    வாரணாசி நகரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கங்கை நதி பாயும் இந்த வாரணாசி நகரம் எனது தாய்க்கு ஒப்பானதாகும். நான் வாரணாசியின் மகன். வாரணாசியில் பாயும் கங்கைத் தாய், தனது மகனான என்னை இங்கு அழைத்துள்ளார் என்று சமீபத்தில் பேசியுள்ளார்.

    மோடி அவர்களே! பராமரிப்பு மற்றும் வளர்ப்பு முறையால் மட்டுமே உறவுமுறைகள் வளர்க்கப்பட வேண்டுமேயொழிய உறவுகளுக்காக ஒருவர் உரிமை கோர கூடாது. உத்தரப்பிரதேசம் மாநில மக்களுடன் உங்களுக்கு உறவுமுறை இருந்திருந்தால் நீங்கள் அவர்களை பராமரித்து வந்திருக்க வேண்டும்.

    முன்பெல்லாம் நல்ல மனநிலையில் இருந்த பிரதமர் மோடி, இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் அமைத்துள்ள தேர்தல் கூட்டணி பிரதமர் மோடியை கலகலக்க வைத்து விட்டதுடன், அவரின் சிரிப்பையும் பறித்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×