search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியல் நிலவரம் பற்றி கவர்னர் எழுதிய புத்தகம் விரைவில் வெளியீடு
    X

    தமிழக அரசியல் நிலவரம் பற்றி கவர்னர் எழுதிய புத்தகம் விரைவில் வெளியீடு

    ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது முதல் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை கவர்னர் புத்தகமாக வெளியிடுகிறார்.
    ஐதராபாத்:

    ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் தமிழ்நாட்டு அரசியலில் குழப்பங்களும், பரபரப்பான சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

    இது குறித்து தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னர் சி.எச். வித்யாசாகர் ராவ் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டது குறித்தும் அதில் தனது பங்கு குறித்தும் பல உண்மை நிலவரங்களை விளக்கியுள்ளார்.

    அந்த புத்தகத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவரது மரணத்துக்கு பின் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிகழ்வுகள் வரை குறிப்பிட்டுள்ளார்.

    அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக வி.கே. சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    புதிய அரசு அமைக்க சசிகலா உரிமை கோரினார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையை உறுதிசெய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அரசுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது வரை புத்தகத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த அக்டோபர் 1-ந் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. அதனால் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் சூழல் உருவானது.

    உடனே மும்பையில் இருந்து சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்ற ஜெயலலிதாவை பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் ராஷ்பவன் சென்று ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டார். அது குறித்தும் இப்புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் என்ற முறையில் தான் ஆற்றிய பங்கு குறித்து விளக்கியுள்ளார்.

    பல தரப்பிலும் இருந்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கவர்னர் என்ற முறையில் தான் ஆற்றிய பங்கு குறித்து பல விளக்கங்களை அளித்துள்ளார். இப்புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    அரசு மாற்றத்தின் போது தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து உண்மை நிலவரங்களை கவர்னர் வெளியிடுவது இதுவே முதன் முறையாக கருதப்படுகிறது.
    Next Story
    ×