search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் குவியும் கேவியட் மனுக்கள்
    X

    ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் குவியும் கேவியட் மனுக்கள்

    ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 69 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 69 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் மற்றும் 9 தனி நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த வாரம் மத்திய அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஆஜராகி, மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடர்பாக சுமுகமான முடிவை எட்டும் வகையில் முயற்சிகள் எடுத்து வருவதால் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த சனிக்கிழமை அவசர சட்டம் பிறப்பித்தது. என்றாலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நீடித்தது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ போன்ற விலங்குகள் நல அமைப்புகளும், விலங்குகள் நல ஆர்வலர்களும் தடை உத்தரவு பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அன்றே சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக தடை கேட்டு ஏதாவது மனு தாக்கல் செய்யப்பட்டால் அந்த விசாரணையில் உடனடியாக தடை விதிக்காது தமிழக அரசின் நிலைப்பாட்டையும் கேட்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்தது.

    இதேபோல் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    தமிழக அரசின் மனு உள்பட மொத்தம் 69 கேவியட் மனுக்கள் நேற்றுவரை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 
    Next Story
    ×