search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி - காங். கூட்டணியை திறமையாக பேசி முடித்த பிரியங்கா
    X

    உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி - காங். கூட்டணியை திறமையாக பேசி முடித்த பிரியங்கா

    உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணியை பிரியங்கா காந்தி திறமையாக பேசி கூடுதலாக சீட்டுகள் வாங்கி கொடுத்தார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றன.

    ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. முதலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருந்த காங்கிரஸ் கட்சி பிறகு சமாஜ்வாடியுடன் கூட்டணிக்கு சம்மதித்தது. ஆனால் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்பட்டது.

    சமாஜ்வாடி ஒதுக்கிய 85 இடங்களை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. குலாம்நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் சில தொகுதிகளை விட்டு கொடுக்க சமாஜ்வாடி மறுத்தது. இதனால் சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முடியாத சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து சமாஜ்வாடி தலைவர் அகிலேசுடன் பிரியங்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பிரியங்கா தற்போதுதான் முதன் முதலாக அரசியல் களத்துக்கு வெளிப்படையாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் அகிலேசுடன் மிகத் திறமையாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிரியங்காவின் முயற்சி காரணமாக அமேதி தொகுதி உள்பட பல தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு மிக எளிதாக கிடைத்தது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 20 தொகுதிகளையும் பிரியங்கா பெற்று கொடுத்தார்.

    நேற்று வரை 85 தொகுதியே தர முடியும் என்று கூறி வந்த அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா பேசியதும் இறங்கி வந்தார். 105 தொகுதிகளை கொடுக்க சம்மதித்தார்.

    அதன் பிறகே சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி இறுதி வடிவத்துக்கு வந்தது. சோனியா ஒப்புதல் கொடுத்ததும் கூட்டணி உறுதியானது.

    பிரியங்காவின் முயற்சியால் வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்துள்ளனர்.

    உத்தரபிரதேச அரசியலில் பா.ஜ.க.வின் வெற்றியைத் தடுத்து நிறுத்தும் வகையில் திறமையாக பிரியங்கா செயல்பட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×