search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் அச்சத்துக்கு காரணம் இல்லை: மார்கண்டேய கட்ஜு விளக்கம்
    X

    ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் அச்சத்துக்கு காரணம் இல்லை: மார்கண்டேய கட்ஜு விளக்கம்

    ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைக்கும் ஆதரவாளர்களின் அச்சத்துக்கு நியாயமான காரணம் இருப்பதாக தெரியவில்லை என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என சென்னை உள்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாணவர்கள், மாணவியர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், இல்லத்தரசிகள், சிறுவர்-சிறுமியர் முதியோர் என அனைத்து தரப்பினரும் சாதி, மதம், அரசியல் பாகுபாடின்றி கடந்த ஒருவார காலமாக நடத்திவந்த எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், அவசர சட்டம் என்பது தற்காலிகமானது மட்டுமே, அரசியல் கண்துடைப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த அவசர சட்டத்தை நம்பி எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என வலியுறுத்திவரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னை மெரினா பீச் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

    இதற்கிடையே, அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக மதுரைக்கு சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அலங்காநல்லூரில் நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது திட்டத்தை கைவிட்டார்.

    கோவை கொடிசியா மைதானத்தில் இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் காரை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைக்கும் ஆதரவாளர்களின் அச்சத்துக்கு நியாயமான காரணம் இருப்பதாக தெரியவில்லை என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

    ஆரம்பத்தில் இருந்தே ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தும், இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துவந்த மார்கண்டேய கட்ஜு, இதுதொடர்பாக இன்று தனது வலைப்பக்கத்தில் (பிளாக்) தெரிவித்துள்ளதாவது:-

    இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் முதன்முறையாக சாதி, மத எல்லைகளை கடந்து நடத்தப்பட்ட ஒரு மாபெரும் போராட்ட இயக்கம் வெற்றிபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    அரசியலமைப்பு சட்டம் 213(2) பிரிவின் படி தமிழ்நாடு கவர்னரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தற்காலிகமானது என மக்கள் கூறுகின்றனர். ஆம், கவர்னரால் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் தற்காலிகமானது என்பது உண்மைதான்.

    எனினும், நாளை தமிழ்நாடு சட்டசபை கூடும்போது, இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்படும். அந்த சட்டத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்படலாம் என்பதும் உண்மை. ஆனால், அந்த வழக்கு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை.

    இவ்விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 254(2)-ன்படி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நினைக்கும் ஆதரவாளர்களின் அச்சத்துக்கு நியாயமான காரணம் இருப்பதாக தெரியவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×