search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா ரெயில் விபத்து பலி 32 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்
    X

    ஆந்திரா ரெயில் விபத்து பலி 32 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்

    பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் - சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூர் இடையே செல்லும் ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பின்னிரவு 11 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தின் குனேரு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் நேற்று பின்னிரவில் செய்திகள் வெளியானது. இன்று காலை நிலவரப்படி சிகிச்சை பலனின்றி சிலர் பலியானதால் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ள நிலையில், இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் நக்சலைட்களின் நாசவேலையால் இவ்விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த பாதையை ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் ஒரு சரக்கு ரெயில் இதே தண்டவாளத்தின் வழியாக சென்றுள்ளது.

    அந்த ரெயில் கடந்த பின்னர், பின்னால் ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் வந்தபோது தண்டவாளத்தில் வெடி சத்தம் போன்ற ஒரு ஓசை கேட்டதாகவும், அதன்பிறகு இந்த ரெயில் கவிழ்ந்ததாகவும் விபத்துக்குள்ளான ரெயிலின் டிரைவர் தெரிவித்துள்ளார்.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் நக்சலைட் தீவிரவாதிகள் வெடி குண்டுகளால் தண்டவாளத்தை தகர்த்து, ரெயிலை கவிழ்க்க முயற்சித்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும், மேற்கொண்டு இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் ரெயில்வே போலீசார் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

    பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இவ்விபத்தில் தங்களது உறவினர்களை இழந்து தவிப்பவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற பிரார்த்திப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ரெயில்வே அமைச்சக அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×