search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்வது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம் - ஜி.எஸ்.டி. குழு முடிவு
    X

    ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்வது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம் - ஜி.எஸ்.டி. குழு முடிவு

    ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்வது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம் என்று ஜி.எஸ்.டி. குழு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ரூ.2 கோடி வரை வரி ஏய்ப்பு செய்வது ஜாமீன் வழங்கக்கூடிய குற்றம் என்று ஜி.எஸ்.டி. குழு முடிவு செய்துள்ளது.

    மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) வருகிற நிதி ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவது, அதுதொடர்பான விதிகளை உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு அவ்வப்போது கூடி ஜி.எஸ்.டி. அமலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஜி.எஸ்.டி. குழுவின் இறுதி கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், மோசடி மற்றும் வசூலிக்கப்பட்ட வரியை அரசு கருவூலத்தில் உரிய காலத்திற்குள் செலுத்தாதது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது என முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து ஒரு அதிகாரி கூறியதாவது:-

    வரி ஏய்ப்பு குற்றத்துக்கான தொகை ரூ.2 கோடிக்கு மேல் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அந்த நபர் ஜி.எஸ்.டி. விதிகளை மீறியதாக கைது செய்யப்படுவார். அதே சமயம் அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு உரிமை அளிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. விதிகளில் உள்ள தண்டனை, அதேபோன்ற குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தில் வழங்கப்படுவதைவிட குறைவானது.

    இந்திய தண்டனை சட்டம் 1860-ன்படி மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஜாமீன் வழங்க முடியாத குற்றம் ஆகும். அதாவது அவர்கள் கோர்ட்டு மூலம் தான் ஜாமீன் பெறமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரி தள்ளுபடி அல்லது திரும்பப்பெறுவதற்காக தவறான கணக்குகளை காண்பிப்பது, உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாதது போன்ற இதர பெரும்பாலான குற்றங்களுக்கான வரையறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டு, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரைவு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய குற்றங்களுக்கு கைது இல்லை, அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×