search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது
    X

    ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது

    ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நேற்று இரவு டெல்லி சென்றார். காலையில் அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக ஓரு மனுவை கொடுத்து கோரிக்கையையும் அவர் கூறினார்.

    பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை விரைவில் காண்பீர்கள் என கூறினார்.

    முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் மாலை 4 மணி விமானத்தில் சென்னை திரும்ப இருந்தார். இந்நிலையில் சென்னை திரும்புவதை அவர் திடீரென ரத்து செய்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சட்டநிபுணர்களுடன் மிகத்தீவிரமாக ஆலோசனை நடத்துகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சாத்தியக்கூறுகள், சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் டெல்லியில் தங்கி இருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்ல தீர்வை கண்டுவிட்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறி உள்ளார்.

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதமாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட மனு தொடர்பாக பிரதம அலுவலகம்,
    மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கருத்துக்களை கேட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரமானது சுப்ரீம் கோர்ட்டின் கீழ் உள்ள நிலையில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகிடம் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

    அப்போது முகுல் ரோத்தகி, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதமாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் துன்புறுத்தல் என்ற குற்றச்சாட்டின் காரணமாகதான் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே காளைகளை பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டத்தினை தமிழக அரசு கொண்டு வரலாம். மாநில அரசின் வலுவான சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ஆட்சேபிக்க வாய்ப்பு கிடையாது.

    தமிழக சட்டசபையில் கொண்டுவரப்படும் சட்டம் கவர்னர் மூலம் ஒப்புதல் பெற்று கொண்டு வருவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என அவர் கூறி உள்ளார்.

    ஜல்லிக்கட்டு உள்ளூர் விளையாட்டு. தமிழக கலாச்சாரத்துடன் ஆழமாக வேரூண்றி உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் மக்கள் காளைகளை கொல்வது கிடையாது. விளையாட்டானது மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் என்பது மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது. புதிய சட்டத்தினை கொண்டுவர மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்று முகுல் ரோத்தகி கூறி உள்ளார்.
    Next Story
    ×