search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 மாதங்களுக்குப் பிறகு இன்று குஜராத்துக்குள் நுழையும் ஹர்திக் பட்டேல்
    X

    6 மாதங்களுக்குப் பிறகு இன்று குஜராத்துக்குள் நுழையும் ஹர்திக் பட்டேல்

    பட்டேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தி, கைதாகி, நிபந்தனை ஜாமினில் தாய்மண்ணை விட்டு பிரிந்திருக்கும் ஹர்திக் பட்டேல் 6 மாதத்துக்கு பிறகு இன்று குஜராத்துக்குள் நுழைகிறார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார், அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சுமார் ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

    விடுதலை ஆகும் தினத்திலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தார். இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிந்ததால் கடந்த ஆறுமாத காலமாக தாய்மண்ணை விட்டு பிரிந்திருந்த ஹர்திக் பட்டேல் இன்று குஜராத் மாநிலத்துக்குள் நுழைகிறார்.

    ராஜஸ்தான் - குஜராத் எல்லைப்பகுதி வழியாக இன்று சொந்த ஊருக்கு திரும்பும் ஹர்திக் பட்டேலை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி சார்பில் ஹிம்மத்நகர் பகுதியில் இன்று நடைபெறும் பொதுகூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணியளவில் காந்திநகருக்கு வரும் ஹர்திக் பட்டேல் குஜராத் முன்னாள் முதல் மந்திரி கேசுபாய் பட்டேலை சந்தித்து ஆசி பெறுகிறார்.

    பின்னர், புனே நகரில் நடைபெறும் ‘பாரதிய சாத்ரா சன்சாத்’ நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார் என அவரது போராட்ட இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தினேஷ் பம்பானியா தெரிவித்துள்ளார்.

    குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் ஹர்திக் பட்டேலின் நடவடிக்கைகளை அம்மாநில மக்களும், அரசியல் கட்சிகளும், குஜராத் மாநில அரசும் வெகு தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×