search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. தொழிலாளர் சங்கத்தின் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    என்.எல்.சி. தொழிலாளர் சங்கத்தின் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    என்.எல்.சி. நிர்வாகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    நெய்வேலி என்.எல்.சி. இண்ட்கோசர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பரமசிவம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அவர்களின் பணி மூப்பின் அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அவர்களை உடனடியாக பணிமூப்பின் அடிப்படையில் நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. என்.எல்.சி. நிர்வாகம் இந்த உத்தரவை அமல்படுத்த 12 வாரங்கள் அவகாசம் கோரியது.

    ஆனால் அந்த 12 வார காலத்துக்குள் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி தள்ளுபடி செய்து என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களை அவர்களுடைய பணிமூப்பின் அடிப்படையில் பட்டியல் ஒன்றை தயாரித்து அதன்படி அந்த ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்றுவரை என்.எல்.சி. நிர்வாகம் எந்த ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. .

    இந்நிலையில், நெய்வேலி என்.எல்.சி. இண்ட்கோசர்வ் தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீது திருத்தம் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், மேற்கண்ட உத்தரவில் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டிய ஊழியர்கள் குறித்த சரியான எண்ணிக்கை மற்றும் காலவரையறை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், நிர்வாகத்துக்கு நிரந்தரம் செய்யப்பட வேண்டிய சரியான ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் காலவரையறையை குறிப்பிட்டு தீர்ப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டது.

    இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வெங்கட்ரமணி, வக்கீல் ஆனந்த செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனுவின் மீதான விசாரணைக்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
    Next Story
    ×