search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு
    X

    கேரள பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு

    கேரளாவில் பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்ததையடுத்து ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமர்ந்து உள்ளது. சட்டசபையில் இதுவரை கணக்கை தொடங்காத பாரதிய ஜனதா கட்சிக்கு இம்முறை ஒரு எம்.எல்.ஏ, சீட் கிடைத்தது. கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஓ.ராஜகோபால் அங்கு எம்.எல்.ஏ, ஆக தேர்வாகி சட்டசபைக்குள் நுழைந்து உள்ளார்.

    இது போல கேரள உள்ளாட்சி தேர்தலிலும் இம்முறை பாரதிய ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தன.

    கேரளாவில் அடிக்கடி அரசியல் மோதல்கள் நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே தான் இந்த மோதல்கள் நடக்கும். தற்போது இந்த கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சியும் இணைந்துள்ளது.

    இதனால் கேரளாவின் வட மாவட்டங்களில் அரசியல் தகராறுகளும், கொலைச்சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு கோழிக்கோட்டில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அரசியல் மோதல்களை உடனே நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

    இருந்தும் அங்கு அடிக்கடி அரசியல் மோதல்கள் நடந்து வந்தன. இதில் பாரதிய ஜனதா தொண்டர்கள் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன.

    இது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநில கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர். அதில் கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி ஆட்சி தொடங்கிய பிறகு பாரதிய ஜனதா கட்சியினர் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 400 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

    இதனால் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    இது பற்றி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்தது. இதில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ், பொது செயலாளர்கள் எம்.டி.ரமேஷ், கே.சுரேந்திரன் ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிய வந்தது.

    எனவே இவர்களுக்கு மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு வி.ஐ.பி. அந்தஸ்துடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது பற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசியல் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டால், அந்த கோரிக்கையில் உள்ள உண்மைத்தன்மை குறித்து பரிசீலனை செய்யப்படும். இதற்காக தனி அமைப்பு உள்ளது.

    அந்த அமைப்பு, வி.ஐ.பி.களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். என்ன வகையான பாதுகாப்பு அளிப்பது என்பதை இன்னொரு குழு முடிவு செய்யும்.

    உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்பு கொடுக்கும் அறிக்கையின் படி வி.ஐ.பி.களுக்கு மத்திய ஆயுதப்படை போலீசார், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவு போலீசார், எல்லைப்பாதுகாப்பு வீரர்கள் மற்றும் இந்திய திபத் எல்லை பாதுகாப்பு வீரர்களில் ஒரு அமைப்பின் வீரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்படுவார்கள். அதன்படி கேரள பாரதிய ஜனதா நிர்வாகிகள் 4 பேருக்கும் 12 வீரர்களை கொண்ட குழு பாதுகாப்பு அளிக்கும்.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    பஞ்சாப் மாநிலத்திலும் இது போன்ற பிரச்சினை காரணமாக பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கும் வி.ஐ.பி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×