search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வைத்த பினராயி விஜயன்
    X

    கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வைத்த பினராயி விஜயன்

    கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதியின் பேரில் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் புதிய சினிமாக்கள் தியேட்டர்களில் திரையிடப்படும்போது அதில் கிடைக்கும் லாபம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    மீதி உள்ள 60 சதவீதம் லாபத்தை வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் பங்குக்கு பிரித்து கொள்வார்கள். இந்த நிலையில் லாபத்தை பிரிப்பது தொடர்பாக இவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது.

    தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு 50 சதவீதம் லாபத்தை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதை தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஏற்க மறுத்ததால் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டம் காரணமாக கேரளாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து புதிய சினிமா எதுவும் வெளியாகவில்லை. மேலும் தமிழ் திரைப்படங்களை கேரளாவில் திரையிடுவதிலும் பிரச்சனை நிலவியது.

    இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள்- தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் இடையே பல முறை சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் அதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரடியாக தலையிட்டார்.

    கேரள அரசு இந்த பிரச்சனையை தீர்க்க சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும், தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் சமூக வலைதளம் மூலம் கேட்டுக்கொண்டார். இதை ஏற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் பஷீர் கூறி உள்ளார்.

    முதல்-மந்திரியின் உறுதியில் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×