search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு தடையால் நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலை: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு
    X

    ரூபாய் நோட்டு தடையால் நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலை: திரிணாமுல் காங்கிரஸ் கடும் தாக்கு

    ரூபாய் நோட்டு மாற்றம் நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலையைக் கொண்டுவந்து விட்டது என மோடி அரசு மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    மோடியின் ரூபாய் நோட்டு மாற்றத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதற்காக மூன்று முறை பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். இதற்கிடையில் கடந்த வாரம் சிட்பண்ட் மோசடி வழக்கில் 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை சி.பி.ஐ. கைது செய்தது.

    ரூபாய் நோட்டு மாற்றத்தை எதிர்த்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக 2 எம்.பி.க்களை கைது செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 30 பேர் இன்று டெல்லி தெற்கு அவென்யூவில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு சென்றதும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-

    இந்த கடினமான சூழ்நிலையை முதலில் நிதி நெருக்கடி எமெர்ஜென்சி எனக் கூறினோம். ஆனால் தற்போது இதனை சூப்பர் எமெர்ஜென்சி என அழைக்கிறோம்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதற்காக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த நாடு இதற்கு முன் பார்த்தது இல்லை.

    ரூபாய் நோட்டு மாற்றத்தால் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாட்டில் 35% பேர் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக மீனவர், மாணவர்கள், அன்றாட வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை எடுக்க மக்கள் கஷ்டப்படுவது தொடர் சம்பவமாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இதுவரை மூன்று முறை ஜனாதிபதியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×