search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் கடும் பனி: ரெயில் - விமான சேவைகள் பாதிப்பு
    X

    டெல்லியில் கடும் பனி: ரெயில் - விமான சேவைகள் பாதிப்பு

    டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரெயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. 24 ரெயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனியும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை டெல்லி, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் பனி புகைமூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

    அடர்ந்த புகை நீண்ட நேரம் நீடித்ததால் காலையில் வாகனப் போக்குவரத்து முடங்கியது. 5 அடி தூரத்தில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் இருந்தது.

    இதனால் ரெயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. 24 ரெயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்பட்டன. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது.

    டெல்லியில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு செல்லும் நேரம் மாற்றப்பட்டது. அந்த ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    அதுபோல 14 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. டெல்லியில் இன்று அதிகாலை சீதோஷ்ண நிலை 7.2 டிகிரியாக இருந்ததால் குளிர் தாங்க முடியாதபடி இருந்தது.

    காஷ்மீர் மாநிலத்தில் குளிர் மிக, மிக அதிகமாக காணப்படுகிறது. நேற்று அங்கு தட்பவெட்ப நிலை 4.9 டிகிரியாக குறைந்தது.

    இந்த பருவத்தில் நேற்று தான் மிக அதிக குளிர் காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக அதிக குளிர் ஏற்படும் 40 நாள் காலம் வருகிற 21-ந்தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×