search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு விவகாரம்: கேரளாவில் கம்யூனிஸ்டுகள் 29ந்தேதி மனித சங்கிலி போராட்டம்
    X

    ரூபாய் நோட்டு விவகாரம்: கேரளாவில் கம்யூனிஸ்டுகள் 29ந்தேதி மனித சங்கிலி போராட்டம்

    ரூபாய்நோட்டு செல்லாது பிரச்சினையால் கேரள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே கேரளாவில் கம்யூனிஸ்டுகள் 29-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
    திருவனந்தபுரம்:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு நாடுமுழுவதும் உள்ள பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகியும் நிலைமை சீரடையாததால் பொதுமக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் தொடர்ந்து படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

    கேரளாவிலும் ஏ.டி.எம். மையங்களில் போதுமான பணம் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.

    மேலும் பல வங்கிகளில் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் நடக்கிறது. இந்த நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக கம்யூனிஸ்டு கட்சிகளின் ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் வைக்கம் விஸ்வநாதன் கூறியதாவது:-

    ரூபாய்நோட்டு செல்லாது பிரச்சினையால் கேரள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த நடவடிக்கை காரணமான மத்திய அரசை கண்டித்து ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். தற்போது அடுத்தகட்டமாக வருகிற 29-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

    கேரள மாநிலத்தின் வட பகுதியில் உள்ள காசர்கோடு முதல் தென் பகுதியில் உள்ள திருவனந்தபுரம் வரையில் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும்.

    இந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வருகிற 20-ந்தேதி பொது கூட்டங்களும், 22-ந்தேதி பாதயாத்திரையும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×