search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதிய கோரம் இல்லாததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    போதிய கோரம் இல்லாததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, பிற்பகல் விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்த்த நிலையில், போதிய கோரம் இல்லாததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளிலும் அலுவல் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. ரூபாய் நோட்டு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரத்தால் பாராளுமன்றம் இன்றும் முடங்கியது.

    மக்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர். ரூபாய் நோட்டு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர் சபையின் மையபகுதிக்கு வந்து கோ‌ஷமிட்டனர். பதிலுக்கு ஆளும்கட்சி உறுப்பினர்களும் வாக்குவாதம் செய்தனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, முதலில் 11.30 மணி வரையும், அதை தொடர்ந்து 12 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரூபாய் நோட்டு பிரச்சனையை கிளப்பினர். மேலும் கோதுமைக்கான ஏற்றுமதி வரியை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதைதொடர்ந்து சபை முதலில் 12 மணி வரையும், பின்னர் மதியம் 2.30 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2.30 மணிக்கு அவை கூடியபோது, அவையை நடத்துவதற்கு போதிய கோரம் (உறுப்பினர்கள் எண்ணிக்கை) இல்லை என்ற பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பினார். அப்போது, அவை நடவடிக்கை தொடங்கினால் மட்டுமே கோரம் பற்றிய பிரச்சனையை எழுப்ப முடியும் என அவையை நடத்திய துணை சபாநாயகர் பி.கே.குரியன் தெரிவித்தார்.

    அதன்பின்னர், தனிநபர் தீர்மானங்களை வாசித்ததும், அவையில் கோரம் மணி அடிக்க உத்தரவிட்டார். அதன்பின்னர் போதிய கோரம் இருக்கிறதா? என்பதை அறிய உறுப்பினர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அப்போது போதிய கோரம் இல்லாததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் குரியன் அறிவித்தார்.

    அவை 2.30 மணிக்கு கூடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்புதான் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×