search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுமை கேரளா திட்டத்தில் விவசாயிகளுக்கு நெற்கதிர்களை வழங்கிய நடிகை மஞ்சுவாரியர்
    X

    பசுமை கேரளா திட்டத்தில் விவசாயிகளுக்கு நெற்கதிர்களை வழங்கிய நடிகை மஞ்சுவாரியர்

    ‘பசுமை கேரளா’ திட்டத்தில் பினராயி விஜயன், நடிகை மஞ்சுவாரியர், பாடகர் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெற்கதிர்களை வழங்கி நெல் நடவு பணிகளை தொடங்கி வைத்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி பினராயி விஜயன் விவசாயத்தில் அதிக ஆர்வம் உடையவர். அவர் முதல்-மந்திரி ஆவதற்கு முன்பு தனது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து அதில் கிடைக்கும் இயற்கை விவசாய காய்கறிகளையே வீட்டு சமையலுக்கு பயன்படுத்தி வந்தார்.

    தற்போது முதல்-மந்திரியின் இல்லத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கும் பினராயி விஜயன் அங்கும் காய்கறி தோட்டம் அமைத்து உள்ளார்.

    கேரளாவில் பருவமழை பொய்த்ததால் பல மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. எனவே கேரளாவை மீண்டும் பசுமை மாநிலமாக மாற்ற பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

    அதன்படி அவர் பதவி ஏற்றவுடன் எனது கேரளம்- சுந்தர கேரளம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விவசாயத்தை மேன்மைப்படுத்த பசுமை கேரளம் என்ற புதிய திட்டத்தை பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசு செய்து வருகிறது.

    பசுமை கேரளம் திட்டத்தை விவசாயிகளிடம் பிரபலப்படுத்த விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் அவர்களை எளிதாக சென்றடைய இதன் விளம்பர தூதுவர்களாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர், பாடகர் ஜேசுதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த திட்டத்தின் தொடக்க விழா பாறசாலையில் நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராயி விஜயன், நடிகை மஞ்சுவாரியர், பாடகர் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெற்கதிர்களை வழங்கி நெல் நடவு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    அப்போது ஜேசுதாஸ் காலில் சில விவசாயிகள் விழுந்து ஆசி பெற்று நெற்கதிர்களை பெற்றுச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மம்முட்டி, சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இது பற்றி பினராயி விஜயன் கூறும்போது, எனது அரசின் முதல் நோக்கம் கேரளாவை பசுமையாக்குவது மற்றும் விவசாயத்தை செழிக்க செய்வதாகும். விவசாயம் தான் நாட்டின் உயிர்நாடி என்றார்.
    Next Story
    ×