search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறுகிய கால சிரமம் நீண்டகால பலனை கொடுக்கும் - பிரதமர் மோடி கருத்து
    X

    குறுகிய கால சிரமம் நீண்டகால பலனை கொடுக்கும் - பிரதமர் மோடி கருத்து

    ரூபாய் நோட்டு விவகாரத்தால் ஏற்பட்ட குறுகிய கால சிரமம் நீண்டகால பலனை கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்து உள்ளார்.
    புதுடெல்லி:

    ரூபாய் நோட்டு விவகாரத்தால் ஏற்பட்ட குறுகிய கால சிரமம் நீண்டகால பலனை கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்து உள்ளார்.

    500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிரடியாக பிரதமர் நரேந்திரமோடி செல்லாது என்று அறிவித்தார். இதனால் பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதில் சிரமப்பட்டனர்.

    இன்னும் பல வங்கிகளில் மக்கள் கூட்டத்தை காண முடிகிறது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடிக்கிடக்கின்றன. மோடியின் அறிவிப்பு வெளியாகி நேற்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ளது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இவ்வாறு ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், ‘டுவிட்டரில்’ பிரதமர் நரேந்திரமோடி கூறியிருப்பதாவது:-

    ஊழல், பயங்கரவாதம், கருப்பு பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய வேள்வியில் உள்அன்போடு பங்கெடுத்துள்ள இந்திய மக்களை வணங்கி மரியாதை செலுத்துகிறேன். நான் ஏற்கனவே கூறியபடி, இந்த குறுகிய கால சிரமம், நீண்டகால பலன்களை கொடுக்கும். நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கட்டாயம் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே அரசு இந்த முடிவை எடுத்தது.

    நமது கிராமங்கள் வளம் பெற்று முன்னேறுவதை இனியும் கருப்பு பணத்தாலும், ஊழலாலும் தடுக்க முடியாது. இவற்றுடன் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை பரவலாக்கவும், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை முன்னுக்கு கொண்டு வரவும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பாக அமைந்து உள்ளது.

    அனைவரும் கருப்பு பணத்தை ஒழித்து கட்டுவோம். இதன்மூலம் ஏழைகளும், நடுத்தர மக்களும் உரிய அதிகாரத்தை பெறுவார்கள். சந்ததியினரும் பலன் பெறுவார்கள்.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார். 
    Next Story
    ×