search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற அமளிக்கு ஜனாதிபதி பிரணாப் கடும் கண்டனம்
    X

    பாராளுமன்ற அமளிக்கு ஜனாதிபதி பிரணாப் கடும் கண்டனம்

    பாராளுமன்றத்தில் நடக்கும் அமளிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். சபை என்பது தர்ணா நடத்தும் இடம் அல்ல, விவாதம் நடத்தும் இடம் என்று அவர் கூறினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடக்கும் அமளிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். சபை என்பது தர்ணா நடத்தும் இடம் அல்ல, விவாதம் நடத்தும் இடம் என்று அவர் கூறினார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நேற்று 16-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில், ‘வலிமையான ஜனநாயகத்துக்கான தேர்தல் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் இவர் இந்த கண்டனத்தை தெரிவித்தார்.

    அதில் அவர் பேசியதாவது:-

    வருடத்தில் ஒரு சில வாரங்கள் மட்டுமே பாராளுமன்றம் நடக்கிறது. அதிலும் அமளியில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்க முடியாதது. பாராளுமன்றத்தில் தங்களுக்காக பேசுவதற்குத்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். தர்ணா நடத்துவதற்கோ, சபையில் இடையூறு செய்வதற்கோ அல்ல.

    பாராளுமன்றம், விவாதம் நடத்தும் இடம். தர்ணா மற்றும் அமளி நடத்தும் இடம் அல்ல.

    பெரும்பான்மையான உறுப்பினர்கள் இதுபோன்று செய்வதில்லை. சிறுபான்மை எண்ணிக்கையிலான உறுப்பினர்கள்தான், சபையின் மையப்பகுதிக்கு செல்வதும், கோஷம் எழுப்புவதும், அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதும், அதனால் சபையை ஒத்திவைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையையும் உருவாக்குகிறார்கள். பாராளுமன்ற நடைமுறையில் இது முற்றிலும் ஏற்க முடியாதது. இது, சிறுபான்மை எண்ணிக்கையிலான உறுப்பினர்கள், பெரும்பான்மை உறுப்பினர்களின் வாயை அடைக்கும் செயல்.

    சபையில் விவாதம் நடத்தி, அலுவல்களை கவனிப்பதற்குத்தான் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இடையூறு செய்வதற்கு அல்ல.

    ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பற்றி பேசுவதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளன. நிதி மசோதா மீது முடிவு எடுக்கும் அதிகாரத்தை மக்களவை உறுப்பினர்கள் பயன்படுத்த வேண்டும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல், ஒரு ரூபாய் கூட செலவழிக்க முடியாது.

    இந்த அமளியானது, யாராலும் ஏற்க முடியாத பழக்கம் என்ற நிலையை அடைந்து விட்டது. எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நமது மனம் திறந்து, சுதந்திரமாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சபையில் பேசும் பேச்சுகளில் எந்த கோர்ட்டும் தலையிட முடியாது.

    யார் மீது கடுமையான குற்றச்சாட்டு கூறினாலும், எந்த கோர்ட்டும் அந்த உறுப்பினர் மீது வழக்கு தொடர முடியாது. ஏனென்றால், அவர் பேசியது பாராளுமன்றத்தில். இத்தகைய சுதந்திரத்தை, சபைக்கு இடையூறு செய்வதன் மூலம் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

    நான் எந்த குறிப்பிட்ட கட்சியையோ, தனிநபரையோ குறிவைத்து இந்த கருத்தை கூறவில்லை. இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெண்களுக்கு 33 சதவீத டிக்கெட் கொடுக்க முன்வரவில்லை. இந்த மசோதா, டெல்லி மேல்-சபையில் நிறைவேறி விட்டது. மக்களவையில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், அங்கும் இதை நிறைவேற்ற வேண்டும்.

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சர்ச்சைக்குரிய விஷயம். தற்போதைய அரசியல் சட்ட வரையறைக்குட்பட்டு இதை எட்டுவது கடினம். இருப்பினும், அடிக்கடி நடக்கும் தேர்தல்களால், வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வழி காண வேண்டும்.

    இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.

    இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கின. மக்களவை கூடியவுடன், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    கேள்வி நேரத்தை நடத்த விடுமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோரியதையும் அவர்கள் ஏற்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் ஏ.சம்பத், ‘வெட்கக்கேடு வெட்கக்கேடு, நிறுத்துங்கள் நிறுத்துங்கள்’ என்று மலையாள மொழியில் கோஷமிட காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் திரும்ப கூறினர். அமளி நீடித்ததால், சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

    பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கொடுத்த நோட்டீசை நிராகரிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    மேலும், அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசுகையில், ‘அமளியில் ஈடுபடும் எம்.பி.க்கள், பேச முயலும் எம்.பி.க்களின் முன்னால் நின்று கொண்டு அவர்களை தடுப்பதை நான் பார்த்து வருகிறேன். இது, மற்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் செயல். அப்படி செய்யாதீர்கள். நான் கடும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை’ என்றார். அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மிலாடி நபி பண்டிகைக்காக, 12-ந் தேதி (திங்கட்கிழமை) சபைக்கு விடுமுறை என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

    டெல்லி மேல்-சபையிலும், எதிர்க்கட்சிகளின் அமளியால், காலையிலேயே 2 தடவை சபை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகும் அமளி நீடித்ததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபைத்தலைவர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்தியதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    ரூபாய் நோட்டு பிரச்சினைக்காக, எதிர்க்கட்சிகள் கடைபிடித்தது ‘கருப்பு தினம்’ அல்ல, ‘கருப்பு பண ஆதரவு தினம்’. காந்தி சிலை அருகே எதிர்க்கட்சிகள் நடத்திய தர்ணா, வெறும் தமாஷ். காந்தியை அவர்கள் அவமதிக்கிறார்கள்.

    காந்தி சிலை அருகே புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தால், காந்தியவாதி ஆகிவிட முடியாது. காந்திய வழியில் இருந்து காங்கிரஸ் எப்போதோ விலகி சென்று விட்டது. பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது, எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உதவாது.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    Next Story
    ×