search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண விவகாரம் தோல்வி அடைந்தால் மோடி அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும்: தேவேகவுடா
    X

    பண விவகாரம் தோல்வி அடைந்தால் மோடி அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும்: தேவேகவுடா

    பண விவகாரம் தோல்வி அடைந்தால் மோடி அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பெங்களூரு:

    பணப்பிரச்சனை தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா அளித்த பேட்டி விவரம்:-

    கேள்வி:- உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் பேசிய நீங்கள், இதை இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியுடன் ஒப்பிட்டு கூறி இருக்கிறீர்களே?

    பதில்:- இந்திராகாந்தி, வங்கிகளை தேசியவுடைமையாக்கியதுடன் மன்னர் மானியத்தையும் ஒழித்தபோது மக்கள் அதை மிகவும் வரவேற்றார்கள். இதனால் ஏழைகளுக்கு நன்மை கிடைக்கும். வேலைவாய்ப்பு பிரச்சனைகள் தீரும் என்று கருதினார்கள். எனவே, 1971-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அவர் 3-ல் 2 பங்கு இடங்களை பெற்றார். 1972-ல் நடந்த சட்டசபை தேர்தல்களில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலை உருவானது.

    இந்திராகாந்தியின் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பின்மை ஒழிப்பு கோ‌ஷத்தை மக்கள் நம்பினார்கள். ஆனால், அடுத்த 3 ஆண்டில் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் மக்களின் நுகர்வுகளை கட்டுப்படுத்துவதாக அறிவித்தார். உடனே மக்கள் அவருக்கு எதிராக திரும்பினார்கள். பெரும் பாதுகாப்புடன்தான் அவர் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது.

    கே:- உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை ஒழித்தது தொடர்பாக என்ன எதிர்ப்புகளை நீங்கள் தெரிவிக்கிறீர்கள்?

    ப:- நவம்பர் 17-ந்தேதி நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். அதில், ரூபாய் நோட்டு ஒழிப்பு சம்பந்தமாக நீங்கள் எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் சூழ்நிலைகளை நீங்கள் சரியாக ஆய்வு செய்யாமல் இந்த முடிவை எடுத்து விட்டதாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

    நவம்பர் 8-ந் தேதி ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு பல மாற்றங்களை அறிவித்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது கொண்டு வந்துள்ள வரிவிதிப்பு மசோதா பல குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

    என்னுடைய கவலை எல்லாம் என்னவென்றால், மோடி எடுத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தருமா? என்பதுதான். அவர் எடுத்த நடவடிக்கை சரியாக அமைந்தால் மோடி மிகப்பெரிய தலைவராக உருவெடுப்பார்.

    அவருடைய கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா, பண பரிமாற்றம் அல்லாத பொருளாதாரம் போன்றவற்றை 6 மாதத்தில் அவரால் சாதித்து காட்ட முடியுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றே நான் கருதுகிறேன். அவர் எடுத்த பண பிரச்சனை விவகாரம் வெற்றி பெற்றால் அவர் யாரும் கேள்வி கேட்க முடியாத பெரும் தலைவராக மாறுவார். ஒருவேளை இந்த திட்டம் தோல்வி அடைந்து விட்டால் அவருடைய அரசியல் வாழ்வே அஸ்தமனமாகி விடும்.

    கே:- இந்த விவகாரத்தில் நீண்ட கால பொருளாதாரத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

    ப:- நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்திக்கும். 6 மாதத்தில் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியாது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நிறைவேற்ற முடியாது. பிரச்சனைகள் இன்னும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பின்மை மோசமாகும். அமைப்புசாரா தொழிலாளர்கள் கடும் பாதிப்புகளை சந்திப்பார்கள்.

    கே:- ஆனால், சமூக ரீதியாக பெரிய எதிர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லையே?

    ப:- எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தூண்டவில்லை. மம்தா பானர்ஜி மட்டும்தான் பிரச்சனையை கையில் எடுத்து போராடுகிறார். பொருளாதார அவசரநிலை ஏற்பட்டு இருப்பதாக அவர் கூறுகிறார். மம்தா போராட்ட குணம் கொண்டவர். அவர் எந்த சொத்தும் குவிக்கவில்லை. அவரிடம் இருப்பது 6 கைத்தறி சேலைகள் மட்டும்தான். முதல் முறையாக எம்.பி. ஆன போது, எந்த வீட்டில் வசித்தாரோ அதில்தான் இப்போதும் வசிக்கிறார். மக்கள் அவருடன் இருக்கிறார்கள்.

    கே:- இந்த கால கட்டம்தான் 3-வது அணியை உருவாக்க சரியான தருணம் என்று கருதுகிறீர்களா?

    ப:- நாளையே 3-வது அணி உருவாகி விடும் என்ற முடிவுக்கு நான் வர விரும்பவில்லை. ஆனால், ரூபாய் நோட்டு பிரச்சனை மோசமான விளைவை ஏற்படுத்தினால் மக்களே இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மக்கள் ஒரு அளவுக்குதான் பொருத்து கொண்டு இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை தாண்டினால் மக்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள்.

    கே:- 3-வது அணி உருவானால் அதற்கு யார் தலைவராக இருப்பார்கள்?

    ப:- சூழ்நிலைதான் ஒருவரை தலைவராக உருவாக்கும். 1996-ல் நான் யார்? அன்று எங்கள் அணியில் 13 கட்சிகள் இருந்தன. என்னை பிரதமராக கேட்டுக்கொண்ட போது, நான் வேண்டாம் என்று கூறினேன். ஏனென்றால், நான் 18 மாதம்தான் முதல்-மந்திரியாக இருந்திருந்தேன்.

    ஆனால், 18 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த ஜோதிபாசு எங்கள் அணியில் இருந்தார். எனவே, அவரை பிரதமர் ஆகும்படி நான் கூறினேன். அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவருடைய கட்சி அதை ஏற்கவில்லை. நான் பிரதமர் ஆகும் நிலை ஏற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×