search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அருகே தம்பியின் கள்ளக்காதலுக்கு உதவிய தொழிலாளி கொலை
    X

    திருவனந்தபுரம் அருகே தம்பியின் கள்ளக்காதலுக்கு உதவிய தொழிலாளி கொலை

    திருவனந்தபுரம் அருகே தம்பியின் கள்ளக்காதலுக்கு உதவிய தொழிலாளியை உயிரோடு எரித்து கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பஞ்சாக்குழி பகுதியை சேர்ந்த தங்கப்பன். இவரது மனைவி ஆக்னஸ். இந்த தம்பதியின் மகன்கள் வர்க்கீஸ் (வயது 25), கிறிஸ்துராஜ் (21).

    வர்க்கீசும், கிறிஸ்துராஜும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாததால் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    கிறிஸ்துராஜுக்கும் பனிச்சமூடு பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததும் அந்த ஆட்டோ டிரைவர் மனைவியை கண்டித்தார்.

    ஆனாலும் கிறிஸ்துராஜ் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்காமல் தொடர்ந்து அவரை சந்தித்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த பெண் தனது கைக்குழந்தையுடன் திடீரென்று வீட்டில் இருந்து வெளியேறி கிறிஸ்துராஜ் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதற்கு கிறிஸ்துராஜின் சகோதரர் வர்க்கீஸ் உதவியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் குழந்தையுடன் மனைவி மாயமானதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்கள் 4 பேருடன் அவரை தேடி கிறிஸ்துராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும் கிறிஸ்துராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சேர்ந்து கிறிஸ்துராஜை அடித்து உதைத்தனர். இதை பார்த்ததும் அவரை காப்பாற்ற அவரது அண்ணன் வர்க்கீஸ் ஓடி வந்தார். இதனால் அவரையும் அந்த கும்பல் தாக்கியது.

    இதற்கிடையில் கிறிஸ்துராஜ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் அந்த கும்பலின் ஆத்திரம் வர்க்கீஸ் மீது திரும்பியது. அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துவந்த அவர்கள் வர்க்கீஸ் மீது  ஊற்றி அவரை உயிரோடு தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் ஆக்னஸ் மகனை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீகாயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தாயையும், மகனையும் காப்பாற்றி திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்க்கீஸ் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆக்னசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் பிடியில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிக்கி உள்ளார். அவர் மூலம் மற்றவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×