search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார்: மோடி மீது மாயாவதி பாய்ச்சல்
    X

    துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார்: மோடி மீது மாயாவதி பாய்ச்சல்

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் துறவிபோல் நடித்து 90 சதவீத மக்களை ஏழைகளாக்கிவிட்டார் என்று பிரதமர் மோடி மீது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன்தான் பெரிய பணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது, அடிமட்டத்தில் இருந்து ஊழலை ஒழிக்கும் கடுமையான போராக இருக்கும் என்று கூறினார்.

    பிரதமர் கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உடனடியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி பலவீனமானவராக உள்ளார். தனது பலவீனத்தை மக்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு திட்டத்தை அவர் திடீரென அறிவித்து மக்களின் கவனத்தை வேறு பக்கமாக திசை திருப்பி உள்ளார்.

    தனக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறார்.

    இன்று அவருடைய செய்கையால் 90 சதவீத மக்கள் பணத் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ‘பந்த்’ நடப்பது போன்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர், பணப் பரிமாற்றம் அல்லாத நடைமுறையை கொண்டு வருவதாக கூறி 90 சதவீத மக்களை ஏழையாக தள்ளி இருக்கிறார்.

    நாங்கள் கருப்பு பணம் ஒழிப்புக்கு எதிரிகள் அல்ல. ஆனால், பெரிய பணங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை ஆதரிக்க முடியாது. இதனால் மக்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். நாங்கள் ஏழை மக்களுக்காகவும், மைனாரிட்டி மக்களுக்காகவும் கட்சி நடத்துகிறோம். அவர்களுடைய வேதனை என்ன என்பது எங்களுக்கு தெரியும்.

    இந்த பண பிரச்சினையில் பிரதமர், நிதி மந்திரி, ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லை. முன் ஏற்பாடுகள் இல்லாமல் எதையோ செய்துவிட்டு இப்போது அதற்கு ஒட்டு போடும் வேலை பார்க்கிறார்கள்.

    பிரதமர் கொண்டு வந்த ஜனதன் வங்கி கணக்கில் பல ஆயிரம் கோடி முதலீடு வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால் யாருக்கு பலன் கிடைத்து இருக்கிறது? பெரிய, பெரிய கார்ப்பரேட் முதலாளிகளும், தொழில் அதிபர்களும் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கிறார்கள். எனவே, ஜனதன் வங்கி கணக்கில் முதலீடு செய்தவர்கள் பற்றிய விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்.

    பிரதமர் மோடி, தான் துறவி போன்றவன் என்று கூறி இருக்கிறார். பெரிய கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாவலராகவும், நலம் விரும்பியாகவும் இருப்பவர் எப்படி துறவியாக இருக்க முடியும்? பலரை பெரும் சொத்துக்காரர்களாக மாற்றுவதற்குத்தான் இவருடைய நடவடிக்கைகள் உதவுவதாக இருக்கிறது.

    இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
    Next Story
    ×