search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
    X

    தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

    தீவிரவாதத்தை ஒழிப்பதுடன் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
    அமிர்தசரஸ்:

    ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் நிரந்தரத்தன்மைக்கு தீவிரவாதம் அச்சுறுத்தலாக இருந்துவருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    அதன்படி, 9-12-2015 அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஐந்தாவது ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு நடைபெற்றது. இதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரஸ் நகரில் இந்த ஆண்டுக்கான ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது.

    ரஷியா, சீனா, துருக்கி உள்பட ‘சார்க்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதரநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்கும் இந்த இரண்டுநாள் மாநாட்டின் முதல்நாளான நேற்று மேற்கண்ட நாடுகளில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    இன்றுகாலை தொடங்கிய இரண்டாம்நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் அரசின் சார்பில் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

    முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நேற்று மாலை
    பிரதமர் மோடி விருந்து அளித்தார். இந்த விருந்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பிரதமர் மோடியை சந்தித்து கைகுலுக்கினார். அந்த புகைப்படத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் பெரிய அளவில் பிரசுரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையுரை ஆற்றியபோது, தீவிரவாதம் மற்றும் வெளியில் இருந்து தூண்டப்படும் நிரந்தரத்தன்மையின்மை போன்றவை ஆப்கானிஸ்தானின் அமைதிக்கும், நிரந்தரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவருவதாக குற்றம்சாட்டினார்.

    தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு மட்டும் நாம் சபதம் ஏற்றால் போதாது, தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள், புகலிடம் அளிப்பவர்கள், பயிற்சி அளிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

    ஆப்கானிஸ்தானின் நலமும் அங்குள்ள மக்களின் நல்வாழ்வும் எங்கள் இதயத்திலும், சிந்தனையிலும் இரண்டற கலந்துள்ளது.

    தெற்காசிய நாடுகளையும், மத்திய ஆசிய நாடுகளையும் இணைக்கும் முனையமாக உள்ள ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது தீவிரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்திவிடும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆப்கானிஸ்தானில் அமைதியும், நிரந்தரத்தன்மையும் ஏற்படவும் ஆப்கானிஸ்தான் அரசு சுதந்திரமான முறையில் அமைதி முயற்சிக்கு முன்வர வேண்டும்.

    இதற்கு உலகநாடுகளும் துணைநிற்க வேண்டும். இந்த சவால் எவ்வளவு பெரியது என்பதைப்பற்றி  கவலை இல்லை. இன்றிணைந்து எடுக்கப்படும் தீவிர முயற்சிகள் எல்லாம் நல்லப் பலனையே தந்துள்ளன. இந்த சவாலிலும் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×