search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் இந்தியா-ரஷியா ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
    X

    கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் இந்தியா-ரஷியா ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

    கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க இந்தியா - ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதற்கான பொது அடிப்படைத் திட்ட ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கையெழுத்தாகிறது.
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோவியத் ரஷியாவின் அதிபராக இருந்த கார்பசேவ் ஆகியோர் கடந்த 1988-ம் ஆண்டு கையெழுத்திட்டனர். ஆனால் அணுமின் நிலையம் கட்டுமான பணி 1997-ம் ஆண்டு தொடங்கியது.

    தற்போது கூடங்குளத்தில் ரூ.20, 962 கோடி செலவில் 1-வது மற்றும் 2-வது அணு உலைகள் கட்டப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 1-வது உலையில் 2013-ம் ஆண்டு அக்டோபரில் உற்பத்தி தொடங்கியது. 2-வது உலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் கிரிடில் இணைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 3-வது மற்றும் 4-வது அணு உலை கட்டுமான பணி வருகிற 2022-23-ம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் அதாவது 5 மற்றும் 6-வது உலைகள் அமைக்கப்பட உள்ளது.

    அதற்கான பொது அடிப்படைத் திட்ட ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கையெழுத்தாகிறது. அதில் பிரதமர் நரேந்திரமோடியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கையெழுத்திடுகின்றனர்.

    ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டு இறுதியில் இதற்கான பொது அடிப்படை திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×