search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.13 ஆயிரம் கோடி வருமானம் காட்டியவரிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை
    X

    ரூ.13 ஆயிரம் கோடி வருமானம் காட்டியவரிடம் வருமானவரி அதிகாரிகள் விசாரணை

    ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்துக்கு கணக்கு காட்டியவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆமதாபாத்:

    மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக தானாக முன்வந்து செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வருமானத்தை காண்பிக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன் பின்னரும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை தெரிவிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்தது.

    இதனால் பயந்துபோன குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா (வயது 67), தனக்கு வருமானமாக ரூ.13 ஆயிரத்து 860 கோடி கிடைத்திருப்பதாக ஆடிட்டர் மூலம் வருமான வரி அலுவலகத்தில் கணக்கு தாக்கல் செய்தார். இதற்கு அவருக்கு 45 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. வரியில் முதல் தவணையாக ரூ.1,560 கோடியை நவம்பர் 30-ந் தேதிக்குள் கட்ட வேண்டும்.

    ஆனால் அவர் சில கருப்பு பண முதலைகளுக்காக செயல்படுவதாக வருமான வரித்துறைக்கு சந்தேகம் வந்ததால் அவர் தாமாக முன்வந்து தாக்கல் செய்த கணக்கை நவம்பர் 28-ந் தேதி ரத்து செய்தது. இதன் காரணமாக மகேஷ் ஷா தலைமறைவாகி விட்டார்.

    வருமான வரி அதிகாரிகள் அவரை தேடிவந்த நிலையில், நேற்று ஒரு தனியார் டி.வி.க்கு அவராகவே சென்று இந்த சம்பவம் பற்றி பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஒரு இருதய நோயாளி. நான் சிறிய அளவில் நிலத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். இதுவரை அவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்தது கூட இல்லை. என்னுடன் தொடர்பில் இருக்கும் சிலர் அவர்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டனர்.

    வருமானமாக நான் காட்டிய தொகை நிச்சயமாக என்னுடையது இல்லை. சில கருப்பு பண முதலைகள் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்களது பெயர்களை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால் வருமான வரி அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி விடுவேன்.

    உயர்ந்த இடத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருமளவு நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

    என் குடும்பத்தினருக்கு கூட நான் இவ்வளவு பெரிய தொகையை கணக்கு காட்டுகிறேன் என்பது தெரியாது. இந்த பிரச்சினையில் அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என கருதுகிறேன். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு இதை செய்துவிட்டேன். ஆனால் இப்போது நான் எனது தவறை உணர்ந்துவிட்டேன். அந்த தவறை திருத்திக்கொள்ள விரும்புகிறேன்.

    இறுதிவரை இந்த பிரச்சினையில் போராடும் வகையில் மனதை திடப்படுத்தி வருகிறேன். ஆனாலும் எனது வாழ்க்கையை நினைத்து பயமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகேஷ் ஷாவின் ஆடிட்டர் தேஹ்முல் சேத்னா கூறும்போது, “அவருக்கு பெரிய நபர்களின் தொடர்பு இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அவர் கணக்கு காட்டிய தொகை அவருக்கு சொந்தமானதாக இருக்கும் என நான் கருதவில்லை. அது மற்றவர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தொகையாக இருக்கும். நான் அவருக்கு ஒரே ஒரு ஆலோசனை தான் கூறினேன். பெரிய அளவில் கருப்பு பணம் வைத்து இருந்தால் தாமாக வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நிம்மதியாக வாழுங்கள் என்று தான் கூறினேன்” என்றார்.

    மகேஷ் ஷாவின் பேட்டி டி.வி.யில் நேரடியாக ஒளிபரப் பப்பட்டது. இதை வருமான வரி அதிகாரிகளும் பார்த்தனர். உடனே அதிகாரிகளின் ஒரு குழுவினர் அந்த டி.வி. அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த மகேஷ் ஷாவை பிடித்துச் சென்றனர்.

    வருமான வரி அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு அவரிடம் வருமானமாக காட்டிய ரூ.13 ஆயிரம் கோடி பணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அது அவருடைய பணம் இல்லை என்றால், யார், யாருக்கு அது சொந்தமானது என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகேஷ் ஷா எப்படியும் கருப்பு பண முதலைகளின் பெயர்களை அதிகாரிகளிடம் கூறிவிடுவார் என்று தெரிகிறது. எனவே விரைவில் அவர்கள் பற்றிய விவரம் வெளிவரும் என்றும், அவர்கள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×