search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது - 52 பேர் உயிர் தப்பினர்
    X

    பெங்களூரில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது - 52 பேர் உயிர் தப்பினர்

    பெங்களூரில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 52 மாணவர்கள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    பெங்களூரு:

    பெங்களூரு ஜாலஹள்ளியில் தனியார் பள்ளியில் படிக்கும் 300 மாணவ-மாணவிகள் நேற்று 6 பி.எம்.டி.சி. பஸ்களில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு சுற்றுலா புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ்களில் ஆசிரியை-ஆசிரியர்களும் இருந்தனர். ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா முதிகெரே கிராமத்தின் அருகே பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் பஸ்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, திடீரென்று ஒரு பஸ்சின் என்ஜினில் இருந்து தீப்பொறி உருவாகியதோடு, அதன் மூலம் பஸ் தீப்பிடிக்க தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக சாலையிலேயே பஸ்சை நிறுத்தினார்.

    இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து வந்து பஸ்சில் இருந்த 52 மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியைகளை மீட்டனர். இதனால், 52 மாணவர்கள் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே, பஸ் என்ஜினில் பிடித்த தீ வேகமாக பஸ் முழுவதும் பரவி எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதனைத்தொடர்ந்து மாற்று பஸ் மூலம் மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பி.எம்.டி.சி. பஸ் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி சென்னப்பட்டணா புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தினால் நேற்று காலையில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×