search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனதாதளத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்க்க மேலிடம் அனுமதி
    X

    ஜனதாதளத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்க்க மேலிடம் அனுமதி

    ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை காங்கிரசில் சேர்க்க, அக்கட்சியின் மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    பெங்களூரு

    கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியான 4 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் தொழில் அதிபர் பாரூக் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்தார். அவருக்கு ஆதரவாக ஜனதாதளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ஜமீர் அகமதுகான், செலுவராயசாமி, பாலகிருஷ்ணா, அகண்ட சீனிவாசமூர்த்தி, கோபாலய்யா, பீமாநாயக், ரமேஷ், இக்பால் அன்சாரி ஆகிய 8 பேரும் ஓட்டுப்போடாமல் காங்கிரசை சேர்ந்த ராமமூர்த்திக்கு ஓட்டுப்போட்டு இருந்தார்கள். இதனால் தொழில்அதிபர் பாரூக் தோல்வி அடைந்தார்.

    இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரையும், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா உத்தரவிட்டார். அதன்பிறகு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 8 பேரும் சேர்க்கப்படவில்லை. தற்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரில், 7 பேர் காங்கிரஸ் கட்சியின் தொடர்பில் இருந்து வருவதுடன், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ஜமீர் அகமதுகான், செலுவராயசாமி, பாலகிருஷ்ணா, அகண்ட சீனிவாசமூர்த்தி, பீமாநாயக், ரமேஷ், இக்பால் அன்சாரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் மற்றும் மந்திரி டி.கே.சிவக்குமாருடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் தொடர்பில் இருந்து வருவதுடன், காங்கிரஸ் கட்சியில் சேர்வது குறித்து தங்களது விருப்பத்தை தெரிவித்ததாகவும், இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது.

    மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரையும் காங்கிரசில் சேர்ப்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரையும் காங்கிரசில் சேர்க்க கட்சி மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதாகவும், அவர்கள் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதியிலேயே 2018-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் மேலிடம் அனுமதி வழங்கி இருந்தாலும், 7 எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் கர்நாடக சட்டசபைக்கு 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தற்போது ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தால், 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் முன்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதே நேரத்தில் மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ.வான கோபாலய்யா ஜனதாதளம்(எஸ்) கட்சியிலேயே நீடிக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் கோபாலய்யா பேசி வருவதாகவும், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
    Next Story
    ×