search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழைகளின் வங்கி கணக்கு மூலம் கருப்பு பணத்தை மாற்றுபவர்களுக்கு மோடி கடும் எச்சரிக்கை
    X

    ஏழைகளின் வங்கி கணக்கு மூலம் கருப்பு பணத்தை மாற்றுபவர்களுக்கு மோடி கடும் எச்சரிக்கை

    “ஏழைகளின் வங்கி கணக்கு மூலம் கருப்பு பணத்தை மாற்றுபவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என்று பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    மொரதாபாத்:

    நாடு முழுவதும், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த வேளையில், சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில், மொரதாபாத் நகரில் பாரதீய ஜனதா பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.

    இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் சொந்த நாட்டில் சிலர் எதற்கெடுத்தாலும் என்னை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை கண்டு நான் வியப்பு அடைகிறேன். கொள்ளை அடிக்கப்பட்டு கொண்டிருந்த நாட்டில், எல்லாவற்றுக்கும் கணக்கு கூற வைப்பது தவறா?

    ஊழல் இல்லாத இந்தியா வேண்டும் என்று விரும்பு கிறீர்களா இல்லையென்றால் ஊழல் இந்தியாவில் தொடர வேண்டும் என்று விரும்பு கிறீர்களா?

    கருப்பு பண முதலைகள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் கண்டுகொள்ளப்போவதில்லை. ஆனால் சாமானிய மக்களின் திருப்தியைப் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன்.

    கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்காக, தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக உழைத்தார்களே தவிர ஏழை, எளியோருக்காக உழைக்கவில்லை.

    டெல்லி செங்கோட்டையில் நான் பேசியபோது, கிராமங்களில் 1000 நாட்களில் மின்சாரம் கிடைக்க செய்வேன் என்று அறிவித்தேன். நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம். எத்தனையோ அரசுகள், பல முறை அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால் எதையுமே செய்யவில்லை.

    ஏழைகளின் உரிமைகளை ஊழல் பறித்துவிட்டது. ஒளித்து வைக்க பணம் வைத்திருப்பவர்கள்தான் என்னை குற்றம் சாட்டுகிறார்கள். நான் ஊழலுக்கு எதிராக போரிட வேண்டாமா? ஊழலுக்கு எதிராக போர் தொடுத்திருப்பது குற்றமா? ஊழலுக்கு எதிராக போரிடுவதாலேயே என்னைப் பற்றி சிலர் தவறாக கூறுகிறார்கள்.

    ஊழலால் சாமானிய மக்கள் அலுத்துப்போய் விட்டார்கள். நோக்கம் நல்லது என்பதை மக்கள் தெரிந்து கொண்டால், அவர்கள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகி விடுவார்கள்.

    ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னால் மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நீண்டவரிசையில் நிற்பதாக சொல்கிறார்கள். வரிசைகளில் நீண்ட நேரம் காத்து நிற்கிற இந்த நாட்டு மக்களுக்கு என் வணக்கம். நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கிற மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களை கேட்கிறேன், நீங்கள் கடந்த 70 ஆண்டுகளில் மக்களை சர்க்கரை, மண்எண்ணெய், கோதுமை என அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதற்கெல்லாம் வரிசையில் நிற்கவைத்தீர்களே?

    இப்போது மக்கள் வரிசையில் நிற்பது கடைசி முறை. இனி அவர்கள் வரிசையில் நிற்க வேண்டி வராது. இனி வரிசையில் நிற்பதெல்லாம் முடிவுக்கு வந்து விடும்.

    நேர்மையில்லாதவர்கள் இப்போது வங்கிகளுக்கு செல்ல முடியாது. நேர்மையான மக்கள் தங்கள் பணத்தை ‘டெபாசிட்’ செய்வதற்கு வங்கிகளுக்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் கருப்பு பணம் பதுக்கிய ஊழல்வாதிகள் ஏழை மக்களின் வீடுகளுக்கு வெளியே தவமாய் தவம் கிடக்கிறார்கள். ஏழை மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்.

    ஏழைகளின் ‘ஜன்தன்’ வங்கி கணக்கில் ஊழல்வாதிகள் கருப்பு பணத்தை ‘டெபாசிட்’ செய்து மாற்ற முயற்சிக்கிறார் கள். ஏழை மக்களே உங்கள் ‘ஜன்தன்’ வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்காதீர்கள்.

    ‘ஜன்தன்’ வங்கி கணக்குகளில் தங்களது கருப்பு பணத்தை பதுக்கியவர்களை சிறையில் தள்ளுவோம். அதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

    புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. முந்தைய அரசாங்கம் போன்ற ஒன்றை நான் நிர்வகிக்க விரும்பவில்லை. அவர்கள் அச்சிட்ட பணத்தையெல்லாம் ஊழல்வாதிகள் பறித்துக்கொண்டார்கள். ஊழலுக்கு அழைத்துச் செல்கிற அனைத்து சாலைகளிலும் நான் தடைகளை ஏற்படுத்த விரும்புகிறேன். ஏராளமாய் பணம் அச்சடித்து தந்து, இத்தகைய ஊழல்வாதிகளுக்கு நான் உதவ விரும்பவில்லை.

    21-ம் நூற்றாண்டில் நாடு, ‘டிஜிட்டல்’ மயமாவதற்கு தயாராகி வருகிறது. நாட்டில் 40 கோடி பேர் ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருக்கிறார்கள். அவர்கள் காகிதப்பணத்துக்கு வெளியே தங்களை வைத்துக்கொள்ள தயாராக உள்ளனர். அவர்கள் செல்போனையே வங்கியாக பயன்படுத்துவார்கள். உங்கள் கடின உழைப்பு, தியாகம், போராட்டம் எல்லாம் வீணாகப் போக விடமாட்டேன்.

    நாட்டின் 125 கோடி மக்கள்தான் எனது தலைவர்கள். நீங்கள்தான் என் தலைவர்கள். எனக்கு வேறு தலைவர்கள் கிடையாது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    Next Story
    ×