search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழலை எதிர்த்து போராடுவது குற்றமா?: பிரதமர் மோடி ஆவேசம்
    X

    ஊழலை எதிர்த்து போராடுவது குற்றமா?: பிரதமர் மோடி ஆவேசம்

    ஊழல் மற்றும் கருப்பு பணத்தை எதிர்த்து போராடுவது எப்படி குற்றமாகும்? என நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இங்கு அரசியல் காய்நகர்த்தல்கள் படுவேகமாக நடந்து வருகின்றன. மாநிலத்தில் இழந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முந்தைய ஆளும்கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய ஆளும்கட்சியான சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இவற்றுக்கிடையே, இம்மாநிலத்தில் தங்களது புதுக்கணக்கை துவங்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், பழைய கணக்கை புதுப்பிக்க காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி தலைமையில் லக்னோவில் நடந்த பிரமாண்ட பேரணி தேசிய ஊடகங்களின் பார்வையை உத்தரப்பிரதேசத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

    இந்நிலையில், மாநிலத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட பா.ஜ.க. சார்பில் காசிப்பூர் நகரில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்ற பரிவர்த்தனை பிரச்சாரப் பேரணியை கடந்த மாதம் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

    இந்த பிரச்சாரப் பேரணியின் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற பரிவர்த்தனை  பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்க வேண்டுமானால் உத்தரப்பிரதேசம், பீகார், மராட்டியம் போன்ற பெரிய மாநிலங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டது வெறும் எம்.பி.யாவதற்காக மட்டுமல்ல, இந்த பெரிய மாநிலத்தில் இருந்து வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகதான் இங்கு போட்டியிட்டேன்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அமோக ஆதரவு அளித்த மொராதாபாத் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மொராதாபாத் நகரம் பித்தளை பாத்திரங்கள் உருவாக்கும் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாகும்.

    நமது நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல கிராமங்கள் மின்சார வசதி பெறாமல் உள்ளது ஏன்? என்று நான் பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை கேட்டேன்.

    அதன்பிறகு, டெல்லி செங்கோட்டையில் முதன்முதலாக சுதந்திர தின உரையாற்றியபோது, இன்னும் ஆயிரம் நாட்களில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். அதை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

    இதற்கு முன்னரும் பல்வேறு அரசுகள் பலமுறை பல அறிவிப்புகளை வெளியிட்டன. மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக உழைப்பதில் நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம்.

    இந்த நகருக்கு நான் தாமதமாக வந்தாலும், உங்களது மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இங்கு வந்துள்ளேன். மக்களாகிய நீங்கள்தான் எனக்கு உயரதிகாரிகள்.

    நாட்டை கொள்ளையடித்தவர்களை அடையாளம் காட்டியதற்காக என் சொந்த நாட்டிலேயே சிலர் என் மீது குற்றம்சாட்டுவதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

    நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமா? அல்லது, நிலைத்திருக்க வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

    ஊழலை எதிர்த்து நான் போராடக் கூடாதா? ஊழலை எதிர்த்து போராடுவது குற்றமா? ஊழலை எதிர்த்து போராடுவதற்காக நான் தவறு செய்வதாக சிலர் கூறுவது ஏன்?

    கருப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் இன்று ஏழை மக்களின் உதவிக்காக அவர்களின் வீட்டு வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். நேர்மையற்றவர்களான அவர்களால் நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை போட முடியாது என்பதால் ஏழை மக்களின் மூலம் மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    ஏழை மக்களின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் கருப்புப் பணத்தை போடும் இதைப்போன்றவர்களை சிறையில் தள்ளுவதற்கான வழி என்ன? என்று சிந்தித்து வருகிறேன்.

    உங்களுடைய கடின உழைப்பு, தியாகம், போராட்டம் ஆகியவை வீணாகப்போக விடமாட்டேன். உங்களுக்காக இந்தப் போரில் நான் ஈடுபட்டு வருகிறேன். என்னை குற்றம் சொல்பவர்களால் என்னை ஒன்றுமே செய்ய முடியாது. நான் ஒரு துறவி, எனக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×