search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை: வனத்துறை எச்சரிக்கையை மீறி காட்டு வழியில் சென்ற தொழிலாளி யானை மிதித்து பலி
    X

    சபரிமலை: வனத்துறை எச்சரிக்கையை மீறி காட்டு வழியில் சென்ற தொழிலாளி யானை மிதித்து பலி

    சபரிமலையில் காட்டு வழியில் சென்ற தொழிலாளி யானை மிதித்து பலியானார். இதையடுத்து காட்டுபாதையில் பக்தர்கள் மாலையிலும், இரவிலும் பயணம் செய்யக்கூடாது என்று வனத்துறை கடுமையாக எச்சரித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    அய்யப்பனை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இவர்கள் சன்னிதானம் சென்று 18-ம் படி ஏறி அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள். பக்தர்கள் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பை, எருமேலி வழியாக சன்னிதானம் செல்வார்கள். மண்டல பூஜை நெருங்கும் வேளையில் புல்மேடு, பெருவழிபாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம்.

    இது ஆபத்தான காட்டுப்பாதை என்பதால் பக்தர்கள் பகல் 2 மணிக்கு மேல் பெருவழிபாதையில் பயணிக்க வேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி இருந்தது.

    மேலும் காட்டுப்பாதையில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் வர வாய்ப்புள்ளதாகவும், எனவே பக்தர்கள் காட்டுப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    ஆனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் இப்போதே காட்டுப்பாதை வழியாக சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    திருவனந்தபுரத்தை அடுத்த மணவூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி விக்ரமன் (வயது 52) என்பவர் நண்பர்கள் 4 பேருடன் பெரு வழி பாதையில் சபரிமலை சென்றார். பிற்பகலுக்கு மேல் தரிசனம் முடிந்து மீண்டும் அதே பாதையில் திரும்பினார்.

    அப்போது திடீரென அவரை ஒற்றை யானை ஒன்று வழிமறித்தது. அந்த யானை விக்ரமனை தும்பிக்கையால் அடித்து காலால் மிதித்தது. இதை அந்த வழியாக வந்த பக்தர்கள் பார்த்து அலறினர். பின்னர் அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டினர்.

    படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விக்ரமனை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்ரமன் பலியானார். இதையடுத்து காட்டுபாதையில் பக்தர்கள் மாலையிலும், இரவிலும் பயணம் செய்யக்கூடாது என்று வனத்துறை கடுமையாக எச்சரித்து உள்ளது.

    Next Story
    ×