search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு: மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
    X

    உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு: மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

    “ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலமாக, வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதாரம் மீது பிரதமர் மோடி போர் தொடுத்துள்ளார்” என்று ராகுல் காந்தி தாக்கினார்.
    புதுடெல்லி:

    “ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலமாக, வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதாரம் மீது பிரதமர் மோடி போர் தொடுத்துள்ளார்” என்று ராகுல் காந்தி தாக்கினார்.

    டெல்லியில் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நல குறைவால் கலந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முதன் முதலாக காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி பேரழிவு ஏற்படுத்துகிற கொள்கை முடிவுகளை எடுத்து தவறு செய்து வருகிறார். அவர் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டால், அதில் இருந்து தடுத்துக்கொள்ள முடியும்.

    பாராளுமன்றம் போன்ற அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் அனுபவத்தை எல்லாம் புறம்தள்ளிவிட்டு, செயல்படுகிற ஒரு பிரதமரை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தந்தது இல்லை. தனது சுய மாயையை காப்பாற்ற கைதியான ஒரு பிரதமரை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தந்தது கிடையாது. தனது சொந்த ஆளுமைக்காக இந்திய மக்களுக்கு மாபெரும் துன்பங்களை ஏற்படுத்த தயாராக உள்ள ஒரு பிரதமரை நாங்கள் ஒருபோதும் தந்தது இல்லை.

    டி.ஆர்.பி.யின் (கூடுதலான பார்வையாளர்களை பெற்று, தொலைக்காட்சி மதிப்பீட்டுப்புள்ளியில் உயர்ந்து நிற்கவேண்டும் என்பதின்) அடிப்படையில் முழு கொள்கை உருவாக்க வியூகங்களை அமைக்கிற ஒரு பிரதமரை நாங்கள் ஒருபோதும் கொடுத்தது இல்லை.

    நமது பிரதமரின் தற்பெருமை, தகுதியின்மையின் விளைவாக நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. நாட்டு மக்களின் குரல்களை செவிகொடுத்து கேட்பது ஒன்றுதான், அவரை தனது சொந்த மாயையில் இருந்து விடுவித்து, வலுவான பிரதமராக ஆக்க உதவும். ஆனால் அதைச் செய்ய அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

    மிக மோசமாக முடிவு எடுத்து, திறமையின்றி செயல்படுத்தப்படும் பணத்தின் மதிப்பை குறைத்தல் நடவடிக்கை பேரழிவு சோதனை ஆகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதாரம் மீது தனி நபராக தொடுத்த போர். இதன் விளைவுகளை உலகம் விரைவில் அறிந்து கொள்ளும்.

    புகழ்பெற்ற பொருளாதார மேதைகள் ஒவ்வொருவரும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு கால நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய புதிய ஊழல் கருப்பு சந்தையை மோடி உருவாக்கி உள்ளார்.

    நாட்டின் மொத்த ரொக்க பொருளாதாரத்தையும், கருப்பு பணத்துடன் சேர்த்து பார்த்து, புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து, 130 கோடி மக்களின் நிதி எதிர்காலத்தை பரிசோதித்து பார்த்து மோடி குழப்பம் அடைந்துள்ளார்.

    ரொக்க பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. எல்லா கருப்பு பணமும் ரொக்கப்பணம் அல்ல. நாட்டின் கருப்பு பணத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பதிலாக, நாட்டின் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தின் மீது தாக்குதல் தொடுத்து விட்டார் பிரதமர்.

    உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால், மொத்த உள்நாட்டு உற்பத்தி, பேரழிவை சந்திக்கும். இது லட்சோப லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது.

    நமது பெண்களின் கைகளில் இருந்த ரொக்கப்பணம் பறிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தாங்களே எடுத்துக்கொள்கிற உரிமையை இழந்துவிட்டார்கள் என்பது மிகவும் வேதனை தருகிறது. புதிய வருமான வரி சட்டத்தால், ஊழல்வாதிகள் தாராளமாக தப்பி சென்று விடுகிற நிலையில், ஏழை, எளிய மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

    இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஏழை மக்கள் ரொக்க பணத்தைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் நேர்மையானவர்கள். கடினமான உழைப்பாளிகள். விவசாயிகளுக்கு விதைகள் வாங்க பணம் தேவை. சிறிய கடைக்காரர்கள் வியாபாரம் செய்வதற்கு பணம் தேவை. மீனவர்கள், தினக்கூலிகள் அனைவருக்கும் பணம் தேவை. நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்துவதற்கு பெண்கள் சேமித்துவைப்பதற்கு பணம் தேவை.

    கருப்பு பணத்தில் 6 சதவீதம்தான் ரொக்கமாக உள்ளது. மீதி 94 சதவீதமும் தங்கமாக, சொத்துகளாக, வெளிநாட்டு வங்கிகளில் டாலர்களாக குவிக்கப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

    வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை திரும்பக்கொண்டு வந்து, ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று மோடி 2014-ம் ஆண்டு கூறினார்.

    எவ்வளவு பணத்தை அவர் இப்போது திரும்ப கொண்டு வந்து சேர்த்துள்ளார்? ஒரு ரூபாய் கூட கிடையாது. எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவரும் கிடையாது. தனது வாக்குறுதியை அவர் நிறைவேற்ற தவறி விட்டார் என்பது தெளிவு.

    ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களின் நலன்கள்மீது அக்கறை கொண்டுள்ளது.

    இனி வரவுள்ள வாரங்களில் நிலைமை இன்னும் மோசமாக போகிறது. மோசமாக முடிவு எடுத்து, திறனின்றி செயல்படுத்தப்படுகிற ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தால், போராடிக்கொண்டிருக்கிற நாட்டுக்கு, நாம் நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×