search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
    X

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

    மேற்கு வங்காளத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

    மேற்கு வங்காளத்தில் பல மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. இதற்கு முதல்- மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராணுவ குவிப்பை கண்டித்து பேசினார்கள்.

    இதற்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் பதில் அளிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாகவே ராணுவம் பல மாநிலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதுபோன்ற வழக்கமான நடைமுறைப்படிதான் மேற்கு வங்காளத்தில் ராணுவம் சோதனை மேற்கொண்டது. இது தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களுடன் இணைந்து தான் செயல் பட்டது. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது வருத்தம் அளிக்கிறது என்றார்.

    இந்த பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    மேல்-சபையில் இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், மேற்கு வங்காளத்தில் மட்டும் அல்ல, அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ராணுவம் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டார்.

    அவரது பதிலை ஏற்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பியதால் சபையில் அமளி ஏற்பட்டது. துணைத் தலைவர் குரியன் எம்.பி.க்களை கடுமையாக எச்சரித்தார். இதனால் அவருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த அமளிக்கிடையே துணைத் தலைவர் குரியன் கேள்வி நேரத்தை எடுத்துக் கொண்டு அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஆகியோரை அடுத்தடுத்து பேச அழைத்தார். அவர்களை பேச விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குறுக்கிட்டதால் அமளி ஏற்பட்டது.

    இதையடுத்து சபை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    Next Story
    ×