search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்கள் குவிப்பு: தலைமை செயலகத்தில் விடிய,விடிய மம்தா உள்ளிருப்பு போராட்டம்
    X

    ராணுவ வீரர்கள் குவிப்பு: தலைமை செயலகத்தில் விடிய,விடிய மம்தா உள்ளிருப்பு போராட்டம்

    மேற்கு வங்காளத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள அரசு தலைமை செயலகத்தில் மம்தா பாணர்ஜி விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் நேற்று திடீரென்று ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவ்வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பதாகவும், போர் போன்ற பரபரப்பான சூழ்நிலை உருவானால் இப்பகுதியில் செல்லும் வாகனங்களை மடக்கி ராணுவத்தின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக ஒத்திகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மாநில அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் தலைமை செயலகம் மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்களை குவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இதுகுறித்து மம்தா கூறுகையில் ‘‘பால்சிட் மற்றும் தங்குனி ஆகிய சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எமர்ஜென்சியை விட இது மிகவும் மோசமாக சூழ்நிலை" என்று தெரிவித்தார்.

    அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா, மிஜோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒரேநேரத்தில் இதுபோன்ற ஒத்திகைகள் நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    சுங்கச்சாவடிகளில் இருந்து ராணுவ வீரர்கள் அகற்றப்படும்வரை மேற்கு வங்காளம் மாநில தலைமைச் செயலகமான ‘நபான்னா’வில் இருந்து வெளியேற மாட்டேன் என்றும் அவர் கூறிவிட்டார்.

    இதையடுத்து, இன்று அதிகாலைவரை தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் மம்தா பானர்ஜி தங்கினார்.

    நேற்று பின்னிரவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மறுப்பு தெரிவித்தும் ராணுவ வீரர்கள் அங்கு ஏன் முகாமிட்டுள்ளனர்?, ராணுவம் அங்கு இருக்கும்வரை மக்களின் பாதுகாவலரான நான் தலைமை செயலகத்தில் இருந்து வீட்டுக்கு போக மாட்டேன் என்று குறிப்பிட்டார்.

    இந்த செயலுக்கு அவர்கள் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு விதமாக அவர்கள் காரணத்தை மாற்றி, மாற்றி கூறி வருகின்றனர். அவர்கள் கூறுவது அத்தனையும் பொய். அவர்களின் நோக்கம் அரசியல் சார்ந்தது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்.

    நாட்டில் ராணுவ புரட்சியா நடக்கப் போகிறது?, ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என நான் அஞ்சுகிறேன். அதனால், தலைமை செயலகத்தைவிட்டு நான் நகரப் போவதில்லை. நான் வாழ்ந்தாலும், செத்தாலும் என் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என மம்தா ஆவேசமாக கூறினார்.

    Next Story
    ×