search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள்: உலக வங்கியின் தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 18-வது இடம்
    X

    தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள்: உலக வங்கியின் தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 18-வது இடம்

    தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் குறித்த உலக வங்கியின் தரவரிசை பட்டியலில், தமிழகத்துக்கு 18-வது இடம் கிடைத்துள்ளது. முதல் 2 இடங்களை ஆந்திராவும், தெலுங்கானாவும் கைப்பற்றி உள்ளன.
    புதுடெல்லி:

    தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் குறித்த உலக வங்கியின் தரவரிசை பட்டியலில், தமிழகத்துக்கு 18-வது இடம் கிடைத்துள்ளது. முதல் 2 இடங்களை ஆந்திராவும், தெலுங்கானாவும் கைப்பற்றி உள்ளன.

    மத்திய அரசு ‘டி.ஐ.பி.பி.’ என்னும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையின்கீழ் 340 அம்சங்களைக் கொண்ட தொழில் சீர்த்திருத்த செயல் திட்டத்தை அறிவித்திருந்தது. அவற்றை செயல்படுத்தி, வளர்ச்சி பெற்று, தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் திகழ்கிற இந்திய மாநிலங்களின் தர வரிசையை உலக வங்கி ஆய்வுசெய்து பட்டியலிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் முதல் இடத்தை சந்திரபாபு நாயுடு தலைமையில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடைபெறும் ஆந்திரா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிற தெலுங்கானா மாநிலம் பிடித்துள்ளது.

    இவ்விரு மாநிலங்களும் இணைந்து, கடந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்திருந்த குஜராத்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளி விட்டன.

    இந்த பட்டியலில் தமிழகத்துக்கு 18-வது இடம் கிடைத்து இருக்கிறது. தமிழகம், கடந்த ஆண்டு 12-வது இடத்தில் இருந்தது. இப்போது அது 18-வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது.

    முதல் 10 மாநிலங்களில் 8 இடங்களை பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுகிற மாநிலங்கள் கைப்பற்றி உள்ளன.

    சத்தீஷ்கார் மாநிலத்துக்கு 4-வது இடம், மத்திய பிரதேசத்துக்கு 5-வது இடம், அரியானாவுக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் 7-வது இடத்தையும், ராஜஸ்தான் 8-வது இடத்தையும், உத்தரகாண்ட் 9-வது இடத்தையும், மராட்டியம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    ஒடிசாவுக்கு 11-வது இடம், பஞ்சாப்புக்கு 12-வது இடம், கர்நாடகத்துக்கு 13-வது இடம், உத்தரபிரதேசத்துக்கு 14-வது இடம், மேற்கு வங்காளத்துக்கு 15-வது இடம், பீகாருக்கு 16-வது இடம், இமாசல பிரதேசத்துக்கு 17-வது இடம், டெல்லிக்கு 19-வது இடம் கிடைத்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி நடக்கிற உத்தரகாண்ட் நாட்டிலேயே 9-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டியலை மத்திய வர்த்தக, தொழில் துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். அப்போது அவர், “மாநிலங்கள் உண்மையிலேயே ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுள்ளன. அனைத்து மாநிலங்கள் இடையேயும் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஒவ்வொரு மாநிலமும், பிற மாநிலத்தின் வளர்ச்சியை கண்காணித்து வந்தன” என கூறினார்.

    31-வது இடத்தில் உள்ள காஷ்மீர் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இன்னும் அதிகப்படியான முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    உலகளாவிய பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் 190 நாடுகளில் 130-வது இடம் என்ற கடந்த ஆண்டின் நிலையை இந்தியா இந்த ஆண்டு தக்க வைத்துக்கொண்டுள்ளது.

    Next Story
    ×