search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தாக்குதலில் முன்னர் பலியான மற்றொரு பெண்ணின் உறவினர்கள் கதறி அழும் காட்சி.
    X
    பாகிஸ்தான் தாக்குதலில் முன்னர் பலியான மற்றொரு பெண்ணின் உறவினர்கள் கதறி அழும் காட்சி.

    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதலுக்கு பெண் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 22 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 22 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஒரு மாத காலமாக அத்துமீறிய வகையில் துப்பாக்கி சூடு மற்றும் மோர்ட்டார் குண்டு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு முதல் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இன்று காலையும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. ராம்கர், அர்னியா, நவ்ஷேரா ஆகிய இடங்களில் உள்ள இந்திய நிலைகள் மீது இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இன்று காலையிலும் தொடர்ந்துவரும் பாகிஸ்தான் படைகளின் தாக்குதலில் அர்னியா அருகேயுள்ள இந்திய எல்லைப் பகுதி கிராமத்தில் வசித்துவரும் பொதுமக்களில் மூன்றுபேர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், இங்குள்ள சம்பா மாவட்டத்திலும் இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ராம்கர் அருகே நடைபெற்ற தாக்குதலில் 22 வயது மதிக்கத்தக்க ஒருபெண் பலியானார்.

    முன்னதாக, நேற்று பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஒரு இந்திய வீரரும், எல்லையோரத்தில் உள்ள இந்திய கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பலியானது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×