search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூகசேவகி உமாபிரேமன்
    X
    சமூகசேவகி உமாபிரேமன்

    கேரளாவில் 90 வயது முதியவர் இறந்ததால் ஆத்திரம்: வெறிநாய்களை கொன்று குவித்த சமூகசேவகி

    கேரளாவில் 90 வயது முதியவர் இறந்ததால் ஆத்திரமடைந்த சமூக சேவகி 27 வெறிநாய்களை ஒரே நாளில் கொன்று குவித்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெறிநாய் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் கடித்து ஏராளமான பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

    கடந்த 10 மாதத்தில் மட்டும் 10 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். வெறி நாய்களை கொல்ல மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டமும் நடத்தினார்கள். இதை தொடர்ந்து வெறிநாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாய்களை கொல்வதற்கு மத்திய மந்திரி மேனகாகாந்தி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். சமீபத்தில் அவர் கேரளாவில் நடந்த பாரதியஜனதா மாநாட்டில் பங்கேற்றபோது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை அழைத்து கண்டித்தார். நாய்களை கொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதனால் மேனகா காந்திக்கு கண்டனமும் எழுந்தது. பொதுமக்கள் உயிரைவிட வெறிநாய்கள் உயிர் பெரிதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே வர்க்கலையில் ராகவன் என்ற 90 வயது முதியவரை வெறிநாய்கள் கூட்டம் கடித்து கொன்றது. மேலும் ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் குருவாயூரை சேர்ந்த சமூக சேவகி உமாபிரேமன் மற்றும் கொச்சியை சேர்ந்த மக்கள் சேவா அமைப்பு தலைவர் ஜோஸ்மாவேலி ஆகியோர் வர்க்கலை சென்று ராகவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.



    அதன்பிறகு அவர்கள் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் வெறிநாய்களை வேட்டையாடினார்கள். அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 27 வெறிநாய்கள் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்டது. பிறகு அந்த நாய்களை குழி தோண்டி புதைத்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் வர்க்கலை போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் சமூக சேவகி உமா பிரேமன் மற்றும் ஜோஸ்மாவேலி ஆகியோரை கைது செய்ய முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக போலீசார் திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

    நாய்களை கொன்றது தொடர்பாக உமா பிரேமன், ஜோஸ்மாவேலி உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பொதுமக்களால் கொன்று புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி எடுத்து கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    வெறிநாய்கள் வேட்டையாடப்பட்டது பற்றி சமூக சேவகி உமா பிரேமன் கூறியதாவது:-

    கேரளாவில் வெறிநாய்களால் பொதுமக்கள் அதிகளவில் உயிர் இழந்து உள்ளனர். நாய்களை கொல்ல அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாய்களை வேட்டையாடினோம். பொதுமக்களை காப்பாற்ற இதை தவிர வேறு வழி இல்லை.

    போலீசார் என்மீது போட்டுள்ள வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன். நான் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் இருந்து சிறந்த பெண்மணிக்கான விருது பெற்றுள்ளேன். அந்த விருதை திரும்ப ஒப்படைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×