search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னருடன் முதல்வர் அகிலேஷ் சந்திப்பு: உ.பி. அரசியல் நிலைமை குறித்து விளக்கியதாக தகவல்
    X

    கவர்னருடன் முதல்வர் அகிலேஷ் சந்திப்பு: உ.பி. அரசியல் நிலைமை குறித்து விளக்கியதாக தகவல்

    உத்தர பிரதேசத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை குறித்து கவர்னரிடம் முதல்வர் அகிலேஷ் யாதவ் விளக்கியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய சித்தப்பாவும் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவருமான சிவபால் சிங்குக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. அமர்சிங் எம்.பி.க்கு ஆதரவாக சிவபால் சிங் செயல்பட்டதாக கூறி அவர் உள்பட நரத் ராய், ஓம்பிரகாஷ் சிங், ஷதாப் சயீதா ஆகிய 4 அமைச்சர்களை அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கினார்.

    மகனின் தடாலடி நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சமாஜ்வாடியின் தேசிய தலைவரான முலாயம்சிங், அகிலேஷுக்கு ஆதரவாக செயல்பட்ட தனது இன்னொரு தம்பியும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்கோபால் யாதவின் தேசிய செயலாளர் பதவியை பறித்தார். இதனால் அகிலேஷ் யாதவ்-சிவபால் சிங் இடையே பனிப்போர் வெளிப்படையாக வெடித்தது.

    அதன்பின்னர் கட்சி தலைவர் முலாயம் சிங்கின் சமரச முயற்சிகள், உயர்மட்ட குழு கூட்டத்திற்குப் பின்னர் சிவபால் உள்பட நீக்கப்பட்ட 4 மந்திரிகளையும் உடனடியாக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது. கட்சியிலும், குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சிவபால் சிங் கூறியுள்ளார்.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று பிற்பகல் ஆளுநர் ராம் நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, 4 அமைச்சர்களை நீக்கியதால் அமைச்சரவையில் உள்ள காலியிடம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து கவர்னரிடம் அகிலேஷ் யாதவ் விளக்கியதாகவும் ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×