search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி தொழில்நுட்ப குழு ஆய்வறிக்கை மீதான தமிழக அரசின் ஆட்சேபனை: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
    X

    காவிரி தொழில்நுட்ப குழு ஆய்வறிக்கை மீதான தமிழக அரசின் ஆட்சேபனை: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

    காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஆய்வு அறிக்கை மீதான ஆட்சேபனையை தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

    மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 மாநிலங்களிலும் காவிரி படுகையில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, தண்ணீர் தேவை ஆகியவை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தேசிய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் இரு மாநிலங்களிலும் ஆய்வு செய்து அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந்தேதி தாக்கல் செய்தனர்.

    இந்த அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பு தங்கள் தரப்பில் இந்த அறிக்கையின் மீதான ஆட்சேபனையை தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில் காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கை மீதான ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக உயர்மட்ட குழு அறிக்கை சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கர்நாடகா திறந்துவிடும்படி எந்த பரிந்துரையும் அறிக்கையில் இடம்பெறவில்லை. பொதுவாக தமிழகத்தில் 15 லட்சம் ஏக்கர் வரை விவசாயம் செய்யப்பட்டு வந்தது. கர்நாடக அரசு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாததால் தற்போது விவசாய நிலத்தின் பரப்பளவு 3 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது.

    அக்டோபர் 13-ந் தேதிவரை காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை 2017 ஜனவரி வரை கிடைக்க சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும்.

    உயர்மட்ட தொழில்நுட்ப குழு கர்நாடகத்திற்கு 2017ம் ஆண்டு மே மாதம் வரை 89 டி.எம்.சி. தண்ணீர் வரத்து இருக்கும் என கணக்கிட்டுள்ளது. ஆனால் அந்த காலகட்டம் வரை கர்நாடகத்தின் நீர் தேவை வெறும் 48 டி.எம்.சி. மட்டுமே. மீதமுள்ள 41 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு தமிழக அரசின் ஆட்சேபனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×