search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிஸ்திரி பதவி நீக்கம்: முன்னெச்சரிக்கையாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்தது டாடா
    X

    மிஸ்திரி பதவி நீக்கம்: முன்னெச்சரிக்கையாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்தது டாடா

    பதவி நீக்கத்தை எதிர்த்து தடை உத்தரவு பெறுவதை தடுக்கும் விதமாக டாடா குழுமம் சார்பில் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
    மும்பை:

    டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய தலைவரை 4 மாதங்களுக்குள் தேர்வு செய்வதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், ரத்தன் டாடா, வேணு ஸ்ரீநிவாசன், அமித் சந்த்ரா, ரோனன் சென் மற்றும் லார்ட் குமார் பட்டாச்சாரியா ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள்.

    சைரஸ் மிஸ்திரி நீக்கம் குறித்து பிரதமருக்கு டாடா குழும இடைக்காலத் தலைவர் ரத்தன் டாடா கடிதம் எழுதியுள்ளார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் குழு ஈடுபட்டுள்ளது. டாடா குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் அதன் ஸ்திரத்தன்மையை இழந்து விடக்கூடாது என ரத்தன் டாடா கூறியுள்ளார்.

    இந்த பதவி நீக்கத்திற்குப் பிறகு மிஸ்திரிக்கும், டாடா குழுமத்திற்கும் இடையே சட்டப் போராட்டம் தொடங்கி உள்ளதாகவும், டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை மிஸ்திரி மறுத்துள்ளார்.

    அதேசமயம் பதவி நீக்கத்துக்கு எதிராக மிஸ்திரி தடை பெறுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக டாடா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மிஸ்திரி நீக்கப்பட்டதற்கான உரிய விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், அவர் லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×