search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் அபாரமான முதல் மந்திரி - ஆனால், இன்னும் வெகுஜன தலைவராகவில்லை: அமர்சிங் கருத்து
    X

    அகிலேஷ் அபாரமான முதல் மந்திரி - ஆனால், இன்னும் வெகுஜன தலைவராகவில்லை: அமர்சிங் கருத்து

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அபாரமான முதல் மந்திரியாக பணியாற்றுகிறார். ஆனால், முலாயம்சிங் போல் வெகுஜன (மாஸ்) தலைவராக அவர் மாற இன்னும் பலகாலம் ஆகும் என சமாஜ்வாதி கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான அமர்சிங் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநில அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.

    உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது முலாயம் சிங் சமரசம் செய்து வைக்கிறார்.

    இந்த மோதலின் உச்சகட்டமாக அமைச்சரவையில் இருந்து சிவபால் யாதவ், நரட் ராய், ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கட்சிக்குள் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைத்து சமாதானப்படுத்த லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த அகிலேஷ் யாதவ் மற்றும் சிவபால் யாதவ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.

    அதன்பின்னர் நடைபெற்ற ஆலோசனையின்போது, அமர் சிங் மற்றும் சிவபாலுக்கு ஆதரவாக முலாயம் சிங் யாதவ் பேசினார்.

    அவர் பேசுகையில், “அமர்சிங் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அமர் சிங்கை கட்சியில் இருந்து நீக்க முடியாது. அவர் தனது சகோதரர் போன்றவர். அவர் இல்லையென்றால் நான் சிறைக்கு சென்றிருப்பேன். சில மந்திரிகள் முகஸ்துதி பாடுகின்றனர். சிவபால் யாதவ் ஆற்றிய பணிகளையும் என்னால் மறந்துவிட முடியாது” என்றார்.

    அதனைத் தொடர்ந்து முலாயம், அகிலேஷ் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும், தனது நம்பிக்கைக்கு உரிய நபரை கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் அந்த பதவியில் நியமித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    ‘கட்சிக்குள் இருந்து விமர்சனம் செய்வோரின் கருத்துக்கள் சரியாக இருந்தால் அது முன்னேற்றத்தின் நோக்கம் என்று கூறலாம். பெரிதாக சிந்திக்க முடியாதவர்கள் தலைவர்களாக ஆக முடியாது. நான் இன்னும் பலவீனமாகவில்லை. கட்சியை யாராலும் உடைக்க முடியாது’ என்றும் முலாயம் கூறினார்.

    இதுபோன்ற வார்த்தை மோதல்களால் நேற்றைய ஆலோசனைக் கூட்டம் கருத்து வேறுபாட்டுடனேயே நிறைவடைந்தது.

    இந்நிலையில், அகிலேஷ் யாதவ் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமர் சிங், ‘முதன்முறை முதல் மந்திரி என்ற வகையில் மாநிலத்தின் முன்னேற்றம், முன்னேற்றத்துக்கான கொள்கைகளை வகுப்பது போன்றவற்றில் அகிலேஷ் யாதவின் செயல்பாடு மிகவும் சிறப்பாகவும், அபாரமாகவும் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

    அகிலேஷ் இன்னும் இளைஞராகவே இருக்கிறார். அவரது தந்தையான முலாயம் சிங் யாதவைப்போல் அகிலேஷ் யாதவ் வெகுஜன (மாஸ்) தலைவரல்ல என்று நான் சொல்லவில்லை. ஆனால், வெகுஜன தலைவராக உருவாவதற்கு பலகாலம் தேவைப்படும்.

    முலாயம் சிங்கைப் போன்ற கட்சியை பலப்படுத்தும் அமைப்புத்திறனும், அகிலேஷ் யாதவைப் போன்ற இளமையான முகமும் இரண்டுமே சமாஜ்வாதி கட்சிக்கு முக்கியமானவைதான்.

    அகிலேஷின் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து தெரிவித்திருக்கிறேன். எனது மரியாதைக்குரிய பெருந்தலைவரின் மகனான அவர் நன்றாக வர வேண்டும் என நான் எப்போதும் விரும்புகிறேன் என்றும் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×